வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரை!

Saturday, March 11th, 2023

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு மார்ச் 9 ஆம் திகதிமுதல் ஏப்ரல் 25 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் மாத்திரம் அடிப்படை சம்பளத்தை வழங்குவது பொறுத்தமானது என தேர்தல் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் போட்டியிடுவதற்காக அரச உத்தியோகத்தர்கள் வேட்புமனு தாக்கல் செய்யுமிடத்து , தேர்தல் நிறைவடைந்து முடிவுகள் வெளிவரும் வரை அவர்கள் சம்பளமற்ற விடுமுறையில் செல்ல வேண்டும்.

எவ்வாறிருப்பினும் இம்முறை தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுள்ளமையினால் தமக்கான சலுகைகளை வழங்குமாறு வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்களால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய தேர்தல் ஆணைக்குழு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கடந்த 9ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக 3000 அரச உத்தியோகத்தர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அவர்களுக்கு அவர்கள் பணியாற்றும் இடங்களில் சம்பளமற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்கள் அரசியல் கட்சிகள் அல்லது சுயாதீன குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் , வாக்கெடுப்பு இடம்பெற்று முடிவுகள் வெளியிடப்படும் வரை சம்பளமற்ற விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

எவ்வாறிருப்பினும் திட்டமிட்ட படி 9ஆம் திகதி தேர்தல் தவிர்க்க முடியாத , எதிர்பாராத காரணிகளால் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரச உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறான நீண்ட காலம் சம்பளமற்ற விடுமுறையிலிருப்பது பெரும் பாதிப்பாகும் என்பதால் , ஏதேனுமொரு வகையில் சலுகைகளை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 102ஆவது உறுப்புரைக்கமைய தேர்தல் நிறைவடையும் வரை அவர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.

அதற்கமைய மார்ச் 9ஆம் திகதியிலிருந்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதினம் வரை குறித்த அரச உத்தியோகத்தர்களுக்கு அடிப்படை சம்பளத்தை மாத்திரம் வழங்குவது பொறுத்தமானது என தேர்தல் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஆணைக்குழுவின் இந்த பரிந்துரைக்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுமாறு கோரி பொது நிர்வாகம் , உள்நாட்டலுவல்கள் , மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: