வெள்ளை அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்கு சிறப்பான கல்வி முறையொன்று கிடைக்கும் – ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!
Tuesday, February 13th, 2024ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் கல்வித் துறையில் மேற்கொள்ள முயற்சித்த மாற்றத்தை முழுமையாக செய்ய முடியுமானால், நாட்டுக்கு சிறப்பான கல்வி முறைமையொன்று கிடைக்குமென ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மொனராகலை புதுருவகல மகா வித்தியாலயத்திற்கு இசைக் கருவிகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
இந்நாட்டின் கல்வித் துறையை மாற்றியமைக்கும் வகையிலான கல்வி வௌ்ளை அறிக்கை நாம் பாடசாலை கல்வி கற்ற காலத்தில் கொண்டுவரப்பட்டது.
அதற்கு தற்காலத்தில் போலவே அன்றும் பெருமளவான எதிர்ப்புக்கள் கிளம்பின. அதனால் கல்வி வௌ்ளை அறிக்கையின் உள்ளீடுகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. அதில் குறிப்பிடப்பட்ட ஓரளவான விடயங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அப்போதைய கல்வி அமைச்சராக இருந்தார். அன்று அவர் கல்வித்துறையில் செய்ய முற்பட்ட மாற்றங்களை செய்திருந்தால் இன்று நாட்டுக்கு சிறந்த கல்வி முறையொன்று கிடைத்திருக்கும் என கல்வி வௌ்ளை அறிக்கைக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமைத்துவம் வழங்கிய எனக்கு இப்போது புரிகிறது.
இதேநேரம் வாழ்க்கையில் தற்செயலாக நடக்கும் நிகழ்வுகளும் நாம் நம்பிக்கையுடன் இருக்கும் பட்சத்தில் நடைமுறையில் சாத்தியமாகலாம் என்ற பாடத்தை கற்க வேண்டும். ஒரு தற்செயலால் வாழ்க்கையை மாற்ற முடியும். பல சிறப்பானவர்களின் வாழ்வில் தற்செயலான நிகழ்வுகளே மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள நீங்கள் அறிவு, கல்வி, அனுபவம், ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்.
அதேபோல் பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க அச்சப்படக்கூடாது. ஒன்றரை வருடங்களுக்கு முன்னரான நாட்டின் நிலைமை உங்களுக்கு நினைவிருக்கும். நாடு முழுவதுமாக முடங்கிக் கிடந்தது. தனமல்வில பகுதியைச் சேர்ந்த நந்தலால் வீரசிங்கவே அந்த நிலையிலிருந்து மீண்டு வர வழிகாட்டினார். ஜனாதிபதியின் அரசியல் தெரிவுக்கான நுட்பமான வேலைத் திட்டத்தை அவரே கொண்டுவந்தார். பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க அச்சப்படக்கூடாது என்பதற்கு அவரே சிறந்த உதாரணம். அச்சமற்றவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்கள் வெற்றியும் அடைவர்.
தற்போதைய ஜனாதிபதிக்கும் அதுவே நடந்தது. தேர்தலில் தோல்வியுற்று ஒரு ஆசனத்தை மட்டும் பெற்றிருந்த தருணத்தில், நாட்டைப் பொறுப்பேற்றுமாறு கூற வேண்டிய நிலைக்கு சிலர் தள்ளப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தூரநோக்கம், இயலுமை, இலக்கு இருந்திருக்காவிட்டால் இன்று நாம் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க முடியாது. அதனை செய்யும் இயலுமை அவருக்கு மட்டுமே இருந்தது.” என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|