வெளியானது அதிவிசேட வர்த்தமானி – பலத்த இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார் முன்னாள் பிரதமர் மகிந்த!

Tuesday, May 10th, 2022

பலத்த இராணுவ பாதுகாப்புடன் இன்று அதிகாலை அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்பதாக நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை அலரி மாளிகையை சுற்றியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையிலேயே  இன்று அதிகாலை பலத்த இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நேற்றையதினம் பிரதமர் அலுவலகத்திற்கு பணிக்காக சென்ற பலர் இன்னும் அங்கு சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகியமையை உறுதிப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில் அரசியலமைப்பின்  47 – 2 – (ஆ) சரத்துக்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுதல் அமுலாகும் வகையில் பதவியில் இருந்து விலகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேற்று மாலை அனுப்பியிருந்தார்.

பொது நலனுக்காக அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் எதிர்காலத்தில் மேலும் பாரிய தியாகங்களை செய்ய தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் தமது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையின் மூலமும் நாடும் மக்களும் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு தீர்வு காண்பதே தமது ஒரே நோக்கமாகும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

000

Related posts: