வெளிமாவட்டங்களுக்கு சென்று சேவையாற்றும் அரச ஊழியர்களுக்கு விசேட போக்குவரத்து சேவை!

Tuesday, April 27th, 2021

யாழ்.மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களில் அரச சேவைக்காக சென்றுவரும் ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்களின் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை கருதி சேவை வழங்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அரச ஊழியர்களின் பாதுகாப்பான போக்குவரத்துக்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளின் எண்ணிகையை அதிகரிக்க வடபிராந்திய போக்குவரத்து சபைக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு மாகாணத்தில் வெளிமாவட்டங்களின் கடமையாற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்துத் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், இளங்கோவன் தெரிவித்திருக்கின்றார்.

சுகாதார அமைச்சின் கொவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் வழிகாட்டலில் பேருந்துகளின் ஆசனங்களுக்கு அமையவே பயணிகளை அனுமதிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ஆசிரியர்கள் அதிகாலை பேருந்து சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். அதனால் ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் என பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையைவிட அதிகமானோர் ஏற்றப்படுகின்றதாக பலதரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: