வெளிநாட்டு கடன்களுக்குமான தவணை கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – மத்தியவங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவிப்பு!

Saturday, November 27th, 2021

 

இலங்கை பெற்றுக்கொண்டுள்ள அனைத்து வெளிநாட்டு கடன்களுக்குமான தவணை கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்  இதன் காரணமாக வெளிநாட்டு கடனுக்கான தவணை கட்டணத்தை செலுத்துவது தொடர்பில் எந்தவித அச்சத்தையும் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பில் இதுவரையில் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே டொலர் பிரச்சினை காரணமாக துறைமுகத்தில் கொள்கலன்கள் இருப்பது குறித்து நடவடிக்கை எடுக்க இலங்கை மத்திய வங்கி தயாராக இருப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நிதி கொள்கை தீர்மானங்கள் குறித்து தெளிவுப்படுத்துவதற்காக மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளுநர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

துறைமுகத்தில் கொள்கலன்கள் இருப்பது குறித்த செய்திகளை பத்திரிகைகளில் காணக்கூடியதாக இருந்ததாகவும், இது தொடர்பாக தான் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வினவியதாகவும், ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, டொலர் காரணத்தினால் கொள்கலன் துறைமுகத்தில் இருப்பின், அதுதொடர்பாக உடனடியாக மத்திய வங்கிக்கு அறிவிக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

அவ்வாறான நெருக்கடியொன்று ஏற்பட மத்திய வங்கி ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: