வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு பலமே அன்றி சுமையில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு ஒரு பலம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டிற்கு பெரும் தொகையான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை மக்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் தாம், கடமையை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் குருணாகல் பிராந்திய தூதரக திறப்பு விழாவில் காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதற்காக பலர் வெளிநாடு செல்லும் நிலையில், அவர்கள் நாட்டிற்கு சுமையாக அன்றி பலமாக இருப்பதாகவே தாம் நம்புவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் பணிபுரியும் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் அல்லது திடீர் மரணங்கள் சம்பவிக்கும் நிச்சயமாக தூதரகத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்.

அதுமாத்திரமன்றி வேலைவாய்ப்பிற்காக அல்லது வேறு ஏதேனும் தேவைக்காக வெளிநாட்டிற்கு சென்றவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் அறியாத சந்தர்ப்பத்தில் அவர்கள் குறித்த தகவல்களை பெறுவதற்கும் தூதரக சேவைகள் பயன்மிக்கதாக அமைகின்றது.

நாட்டின் பெரும்பாலானவர்கள் இந்த தேவைக்காக கொழும்பிற்கு வருவதால் சில சந்தர்ப்பங்களில் ஒரே நாளில் தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் வடக்கு, தெற்கு மக்களுக்கு அந்த பிரச்சினை இல்லை. ஏனெனில் யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறையில் தூதரகங்கள் காணப்படுகின்றன.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வடமேல் மாகாணத்தில் தூதரகத்தை திறப்பதற்கு தீர்மானித்தாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

முன்னேற்றத்தைத் தவிர வேறு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவையாற்றுபவர்கள் ஆசிரியப் பெருந்தகைகள் - ஐயாத்...
இறுதி நாட்களிலேயே நாட்டை திறப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் - இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் ...
இக்கட்டான நேரத்தில் இந்தியா, இலங்கையுடன் நிற்க வேண்டியதன் அவசியத்திற்கு இந்திய நாடாளுமன்ற ஆலோசனைக் க...