வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் முறையான பி.சி.ஆர் அறிக்கைகளை கொண்டு வர வேண்டியது அவசியம் – இராணுவத் தளபதி வலியுறுத்து!

Saturday, July 3rd, 2021

வெளிநாட்டில் இருந்து நாட்டுக்குள் வருபவர்கள் முறையான பிசிஆர் அறிக்கைகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஆகியோரின் தலைமையில் கொவிட் – 19 தடுப்புச் செயற்பாடுகள் தொடர்பிலான மீளாய்வு கூட்டமொன்று இடம்பெற்றது. இதன்போதே, இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் மாகாணங்களுக்கிடையில் தொடர்ச்சியாக பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், பிரதேசங்களை தனிமைப்படுத்துதல், வெவ்வேறு தரப்பினரின் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான கோரிக்கைகள், தொடர்ந்து தடுப்பூசி ஏற்றும் திட்டங்கள், வெளிநாட்டிலிருப்பவர்களின் வருகை மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள், பிசிஆர் சோதனைகள் மற்றும் ஆன்டிஜென் சோதனைகள் நடத்துதல், அரசாங்க தனிமைப்படுத்தல் நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

இதன்போது முறையான பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்துக்கொண்டு வருவோருக்கு மாத்திரமே இலங்கைக்குள் இடமளிக்க முடியும் என்றும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவோர் சிலர் அண்டிஜன் பரிசோதனைகளை மாத்திரமே செய்துக்கொண்டுள்ளனர் எனவும், இனிவரும் நாட்களில் அவர்கள் முறையான பிசிஆர் அறிக்கையுடனேயே நாடு திரும்ப வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் அங்கீகிக்கப்பட்ட பகுதிகளில் மாத்திரமே பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் தனிமைப்படுத்தல் நிலையங்கள் நிரம்ப ஆரம்பித்துள்ளமையால் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் சுமூகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் 2021 ஜூன் வரையிலான நிலைமை மற்றும் இலங்கையின் மூலோபாயம் என்பன தொடர்பில் விளக்கமளித்துடன் “வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம்” என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: