வெளிநாட்டிலிருக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கையொன்றை தயாரிக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார வலியுறுத்து!
Thursday, September 7th, 2023வெளிநாட்டிலிருக்கும் இந்நாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கையொன்றை தயாரிக்க வேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊடாகவே நாட்டிற்கு அதிக வருமானம் கிடைக்கின்றது.
இலங்கை மத்திய வங்கி 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையின் படி 2022 ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட 1610 மில்லியன் டொலர் வருமானத்திற்கு மேலதிகமாக 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 2823 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அது 75 சதவீத வளர்ச்சியாகும். இவ்வருடத்தின் இறுதியில் 6500 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இலக்கான 7000 மில்லியன் டொலர் வருடாந்த வெளிநாட்டு வருமானம் என்ற இலக்கை இவ்வருட இறுதிக்குள் அடைந்துவிட முடியும் என்றும் நம்பிக்கை உள்ளது.
இவ்வருட இறுதிக்குள் நியூசிலாந்து, சிங்கப்பூர், மோல்டா இராச்சியம், துருக்கி, லக்சம்பர்க், சைப்பிரஸ், பிலிப்பைன்ஸ், ருமேனியா, மலேசியா, மாலைத்தீவு, லெபனன், குவைட், ஹோமான், கட்டார், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கைசாத்திடப்படவுள்ளன.
1985 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலையாய்ப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அமைச்சரவை அனுமதி தற்போது கிடைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பிலான குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான சட்டத்தை மேலும் பலப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கான அனுமதி வழங்கும் பொறிமுறையை சீரான முறையில் முன்னெடுக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்குச் செல்வோரின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் ஒன்றை வழங்கும் திட்டம் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான வலுவூட்டல் திட்டங்கள் ஆகியவற்றையும் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அத்தோடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பிலான தேசிய கொள்கை ஒன்றைத் தயாரிக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டங்களை யாழ்ப்பாணத்திலும் முன்னெடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|