வெளிநாடுகளில் பணிபுரிவோருக்கான ஓய்வூதியத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி
Friday, December 9th, 2016வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் எதிர்கால பாதுகாப்புக்காக அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நீண்டகாலமாக பேசப்பட்டுவந்த பிரச்சனையாக இது காணப்பட்டபோதிலும் ஜனாதிபதி தேர்தல் மேடைகள் மற்றும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மற்றும் தேசிய பிரதேச செயலக அபிவிருத்தி அலுவலர்களுக்கு கணணிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மேலும் ஜனாதிபதி உரையாற்றுகையில் ,
நாட்டுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித்தந்து தேசிய பொருளாதாரத்துக்கு பரந்தளவான பங்களிப்பை நல்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்களுக்காக அரசாங்கம் அதிக அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் பிள்ளைகளுக்காக அமுல்படுத்தப்படும் இந்த புலமைப் பரிசில் திட்டமானது ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளில் சித்தியடையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து, வெளிநாடுகளில் தொழில் புரிவோரின் பிள்ளைகளுக்கு உரித்துடையதாகும் என்று சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள, பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சின் செயலாளர் பி.எஸ்.விதானகே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|