வெலிக்கடை படுகொலை தொடர்பில் பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை!

கடந்த 2011ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்த பட்டியலிடப்பட்ட படுகொலை சம்பவம் தொடர்பாக பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவை கைது செய்ய, சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் நடைபெற்ற தினமான 2011 நவம்பர் 10ஆம் திகதியன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து கைதிகளின் பெயர்களை கூறி கொலை செய்ய கைதிகளை தெரிவுசெய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ரங்கஜீவவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த தினத்தில் ரங்கஜீவ வேறு ஒரு பணிக்காக செல்வதாக பதிவு ஏட்டில் குறிப்பிட்டு விட்டே, சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்திய குழுவுக்கு சாட்சிகள் கிடைத்துள்ளன.
இவருக்கு எதிராக, நேரில் பார்த்த பல சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சாட்சியங்களின் அடிப்படையில், ரங்கஜீவவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை சம்பவத்தின் போது இராணுவத்தினருக்கு ஆலோசனை வழங்கியமை மற்றும் துப்பாக்கி பிரயோகம் செய்ய உத்தரவிட்ட குற்றச்சாட்டில் பிரிகேடியர் ஒருவரை கைது செய்ய, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதி வரை பிரிகேடியரை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கவில்லை என தெரியவருகிறது.
Related posts:
|
|