வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Saturday, January 13th, 2024

வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே நிலவிய அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதுடன், இன்று காலையும் இளைஞர்களுக்கு இடையில் சற்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் தலையீட்டினால் மோதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றியமைக்க, அங்கு நிலவும் மோதல்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில், எமது செய்திச்சேவை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் வினவியது.

அதற்கு பதலளித்த அவர், குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நேற்று பிற்பகல் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் மதிய உணவு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையின் அடிப்படையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 90 கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன், 72 கைதிகள் சரணடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 26 பேர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும் மூன்று பேர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: