வெறிச்சோடியது உடுவில் – அச்சத்துடன் பரிசோதனை முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்!

Sunday, December 13th, 2020

உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

அத்துடன் உடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ – சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் முடக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

உடுவில் பிரதேச செயலக பிரிவில் 30 கிராம அலுவலகர் பிரிவுகளில் 28 பிரிவுகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் யாழ். மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

இதனிடையே நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளுக்கு மேலதிகமாக உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளில் 104 பேருக்கான பரிசோதனை இன்றையதினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நடைபெறும் . இது தவிர 114 பேருக்கான மாதிரிகள் அனுராதபுர ஆய்வுகூடத்தில் பரிசோதனை செய்யப்படும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் க. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. இவர்களில் சிலருக்கு தொற்று இருக்கலாம் என எதிர்வு கூறப்பட்டாலும் எதிர்வரும் நாட்களில் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் போது மாத்திரம் தொற்று எண்ணிக்கை பற்றி உறுதிபட கூற முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் இந்நிலையில் மருதனார்மட சந்தை வியாபாரியொருவர் தொற்றிற்குள்ளானதையடுத்து, நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பலர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றும் கணிசமானவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டலாமென்ற அச்சம் நீடித்து வரும் நிலையில், மருதனார்மடம் பகுதி வெறிச்சோடிப் போயுள்ளது. இதேவேளை, உடுவில் பிரதேச செயலக பகுதிக்கு நடமாட்ட தடைவிதிக்கப்பட்டுள்ள போதும், அந்தப் பகுதியின் ஊடான வீதியை ஏனைய பகுதியிலுள்ளவர்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: