வீதி புனரமைப்பின் போது சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி செயலணியின் தலை வர் பஷில் ராஜபக்ஷ!

Sunday, September 6th, 2020

வீதி புனரமைப்பின் போது சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்திட்டத்தை முன்னெடுத்தல் வீதியின் இரு மருங்கிலும் பயன்தரும் மரங்கள் நாட்டுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலை வர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –

அரசாங்கத்தின் கொள்கை வேலைத்திட்டத்தின் கீழ் வீதி புனரமைப்பு செயற்திட்டம் போக்குவரத்து அமைச்சு, கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வழிநடத்தலின் படி மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் திணைக்களத்தினால் செயற்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு உரிய வீதிகள், பிரதான வீதிகள் இரண்டையும் இணைக்கும் வீதி, பிரதான நகரங்களுடன் தொடர்புபடும் சிறப்பு வீதி, இச்செயற்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன.

இந்த செயற்திட்டத்தைச் செயற்படுத்தும் போது தேசிய நீர் வழங்கல் அதிகார சபை, மின்சார சபை, ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

வீதி புனரமைப்பிற்கான முன்னுரிமை பட்டியலொன்றை நிறுவனங்களுக்குப் பெற்றுக் கொடுப்பதன் ஊடாக அவ்வப்போது வீதிகளைப் புனரமைக்கும் போது நீர் விநியோகத்தை முன்னெடுப்பது தொடர்பில் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்தல் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வீதி புனரமைப்பின் போது சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்திட்டத்தை முன்னெடுத்தல், வீதியின் இரு மருங்கிலும் பயன் தரும் மரங்களை நாட்டுதல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: