வீதி சீரின்மையால் அவலப்படுகிறது ஒரு பாடசாலை!

Friday, January 25th, 2019

அரியாலை கிழக்குப் பகுதிக்குச் செல்கின்ற முதன்மை வீதி அழிவடைந்துள்ளதால் அங்குள்ள அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

போர்க் காலத்துக்கு முன்னர் அரியாலை கிழக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றனர். தரம் 5 வரை இருந்த பாடசாலை தரம் 8 வரையாக உயர்த்தப்பட்டது. தற்போது 10 மாணவர்களே உள்ளனர். இதற்கு முதன்மைக் காரணம் அரியாலை கிழக்கு நோக்கிச் செல்லும் முதன்மை வீதி பூம்புகார் வரை செப்பனிடப்பட்டபோதும் அதில் இருந்து அரியாலை கிழக்கு வரை செல்லும் வீதி மோசமாகக் குன்றும் குழியுமாக மாறியுள்ளமையே. அந்த வீதி ஈருருளி கூட பயணம் செய்ய முடியாத அளவுக்கு அழிவடைந்துள்ளது. அரியாலை கிழக்கு கிராமத்தில் உள்ள சிறு வீதிகள் நல்லூர் பிரதேச சபையால் செப்பனிடப்பட்டுள்ளன.

முதன்மை வீதியைச் செப்பனிடும் பொறுப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரியது. நீண்ட காலமாக அங்குள்ள மக்கள் கோரிக்கை முன்வைத்தும் கவனிப்பாரற்ற வீதியாக அரியாலை கிழக்கு வீதி உள்ளமை உயரிய மாவட்டங்களுக்கு தெரியாத விடயமாக இருக்குமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.

இந்தப் பகுதியில் பெருமளவான நெல்வயல்கள் உள்ளன. கடற்றொழில் மூலமாகப் பயன்பெறுவோர் சென்றுவரும் பகுதியாகவும் இது உள்ளதால் இந்த வீதி உடனடியாகச் செப்பனிடப்பட வேண்டும்.

அரியாலை கிழக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் கற்ற ஏராளமான மாணவர்கள் பாடசாலை விடுகைப் பத்திரங்களைப் பெற்று நகர்ப்புறப் பாடசாலைகளை நோக்கிக் குடும்பத்தோடு நகர்ந்து வருகின்றனர். எனவே உரியவர்கள் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts: