வீதியோரங்களில் திரியும் நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றீகன்!

Wednesday, August 1st, 2018

வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி நாய்களால் மட்டுமல்லாது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களாலும் வீதியோரங்களில் செல்லும் மாணவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்  றீகன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்

மேலும் அவர் தெரிவிக்கையில் –

யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கொட்டப்படும் கழிவுகளால் ஒருபக்கம் மக்கள் அவதியுற்றுவரும் நிலையில் கட்டாக்காலி நாய்களாலும் வீட்டு வளர்ப்பு நாய்களாலும் மக்கள்  மட்டுமல்லாது பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களும் நாளாந்தம் அதிகளவில் பாதிக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் அதிகளவான பாடசாலைகள் இருக்கின்றன. இவற்றுக்கு காலை வேளைகளில் மாணவர்கள் செல்லும்போது வீட்டு நாய்கள் முதல் கட்டாக்காலி நாய்கள் வரை துரத்தி அச்சுறுத்துவதும் ஒரு சிலருக்கு கடித்து காயப்படுத்தும் அவல நிலையும் ஏற்படுகின்றது. இதனால் பாடசாலை மாணவர்களே அதிகம் பாதிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது வீதிகளின் குறுக்காக திடீரென பாயும் நாய்களால் அதிகளவான வாகன விபத்துக்களும் ஏற்பட்டு பலர் பாதிப்புறுகின்றனர். இந்த நிலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: