வீடுகள் கட்டுவோருக்குப் பிரதேச செயலர் முக்கிய அறிவுறுத்தல்!

Thursday, February 14th, 2019

அரச வீட்டுத் திட்டத்தில் தெரிவானோர் புதிதாக வீடுகள் கட்டும்போது வீட்டுக் கூரைக்கான பனைமரங்களுக்குப் பதிலாக மாற்று மரங்களையும், கட்டட வேலைகளுக்குப் பாலியாற்று மணலையும் பூச்சு வேலைக்கு நாகர்கோவில் மணலையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வீட்டுக் கூரைகளுக்கு அதிகமானோர் பனை மரங்களையே பயன்படுத்துகின்றனர். பனை வளம் அழிந்து போகாமல் இருக்க பனைக்குப் பதிலாக மாற்று மரங்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஒரே நேரத்தில் 165 பேருக்கு வீட்டுத் திட்டம் கிடைத்ததால் அவசரப்படாமல் மூலப் பொருள்களைக் கொள்வனவு செய்து பயன்படுத்துங்கள்.

அனைவரும் ஒரே நேரத்தில் மூலப்பொருள்களைக் கொள்வனவு செய்ய முற்படும் போது விலை அதிகரித்துச் செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிரதேசத்தில் மணல் வளம் குறைவடைந்துள்ளது.

மூன்று மாதங்களுக்குள் கட்டட வேலைகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும். ஒவ்வொரு பயனாளியும் பிரதேச செயலகத்துடன் ஒத்துழைத்து வீட்டுத்திட்டம் சிறப்பாக அமைய பாடுபடல் வேண்டும். ஒவ்வொரு கட்டட வேலைகளின் பின்னரே நிதி 5 கட்டங்களாக வழங்கப்படும்.

பயனாளிகள் வீடுகள் அமைக்க முன்னர் உள்ளூராட்சிச் சட்டங்களுக்கு அமைவாக கட்டடம் அமைப்பதற்குத் தங்கள் பகுதியில் உள்ள சாவகச்சேரி நகரசபை, சாவகச்சேரி பிரதேச சபை போன்றவற்றில் உரிய கட்டட விண்ணப்பங்களைப் பெற்று அவர்களால் கோரப்படும் விடயங்களைக் கையளித்து அங்கீகாரம் பெற வேண்டும்.

பிரதேச செயலக அலுவலர்கள் எந்த நேரமும் தங்களுக்கு வழிகாட்டவும் ஆலோசனைகள் வழங்கவும் தயாராக இருப்பார்கள்.

வீட்டுத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவானோரில் முதற்கட்டமாக ஆயிரத்து 500 பேருக்கும் அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4 ஆயிரத்து 500 பேருக்கும் வீடுகள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் பணிகள் உத்தியோகபூர்வமாக தைப்பொங்கலுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts: