வீடமைப்புத் திட்டத்துக்கான பயனாளி தெரிவில் மூன்று நிபந்தனைகள் கடைப்பிடிப்பு!

Thursday, January 24th, 2019

யாழில் இம்முறை முதல் கட்டமாக கிடைத்த ஆயிரத்து 500 வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவில் மூன்று முக்கிய நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களை மட்டுமே உள்வாங்குமாறு பணிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்துக்கு முதல் கட்டமாக 5 ஆயிரம் வீடுகள் சிபார்சு செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆயிரத்து 500 வீடுகள் மட்டும் கிடைத்துள்ளன. அதனால் கிடைத்த வீடுகளை பாதிப்பின் அடிப்படையிலும் தேவை மூலம் அடிப்படையிலும் தேர்வு செய்வதற்காக மூன்று முக்கிய நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்பட்ட நிபந்தனைகளாக போரினால் வீடுகள் அழிவடைந்த அல்லது பாரிய அளவில் சேதமடைந்த குடும்பங்கள், இறுதிப் போரின் பின்னர் வன்னியில் இருந்து குடும்பமாக மீள்குடியேறிய  வீடு அற்றவர்கள் அதேபோன்று இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய வீட்டு வசதி அற்ற குடும்பங்கள் ஆகியோரை மட்டுமே பட்டியலில் இணைத்துக்கொள்ள வேண்டும். எனப் பிரதேச செயலர்களிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறானவர்கள் அதிகமாகக் காணப்பட்டால் இவர்களில் உள்ள விதவைக் குடும்பங்கள், காணாமற்போனோர் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களில் இருந்து தேர்வுகளை மேற்கொள்ள முடியும். அதேநேரம் இந்த ஆண்டு தற்போது கிடைத்துள்ள வீட்டுத்திட்டத்தில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திருமணம் செய்த குடும்பங்களும் உள்வாங்கப்பட முடியாது எனவும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நியதிக்கு உட்பட்டவர்களின் பெயர் விபரங்களே தேர்வு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்படுவதை ஏனைய மக்களும் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் உண்டு என்றார்.

Related posts: