வீசா சலுகை இடைநிறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் விளக்கம் கோருகிறது பங்களாதேஷ்!

தங்கள் நாட்டு பிரஜைகளுக்கான வீசா சலுகை இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க வேண்டுமென பங்களாதேஷ் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பங்களாதேஷ் பிரஜைகள் நாட்டை வந்தடைந்ததும் வீசா (on-arrival visa) பெற்றுக்கொள்ளும் வசதியினை கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது.
எனினும் தற்போது எவ்வித முன்னறிவித்தலும் இன்றி இலங்கை, பங்களாதேஷ் பிரஜைகளுக்கான நாட்டை வந்தடைந்ததும் வீசா பெற்றுக்கொள்ளும் வசதியினை இடைநிறுத்தியுள்ளது.
இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள கல்ப் டைம்ஸ், இந்த வசதி இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணத்தை இலங்கை தெளிவுபடுத்த வேண்டுமென பங்களாதேஷ் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை, பங்களாதேஷ் அரசாங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பிரஜைகளுக்கான நாட்டை வந்தடைந்ததும் வீசா வழங்கும் நடைமுறையை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
பங்களாதேஷுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகரவை அழைத்து இது தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் அரசாங்கத்தின் வெளிவிவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் கம்ருன் அசான் தெரிவிக்கையில், சுமார் ஒரு மணித்தியாலம் இலங்கை உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த விடயம் தொடர்பில் தங்கள் நாட்டின் அதிருப்பதியை தாம் வெளிப்படுத்தியதாகவும் குறி்ப்பிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ள பங்களாதேஷுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகர, எவ்வாறெனினும் வெளிவிவார அமைச்சுடன் பேசியதன் பின்னர் இது குறித்து தெளிவுபடுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|