விவசாய அமைச்சின் கீழுள்ள ஊழியர்களின் விடுமுறைகள் ஜூலை 06 முதல் இரத்து – ஜூலை 07 முதல் உரம் விநியோகத்திற்கான போக்குவரத்து ஏற்பாடு!

Sunday, June 26th, 2022

விவசாய அமைச்சின் கீழியங்கும் அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களினதும் விடுமுறைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதிமுதல் இரத்துச் செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள 60,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை காலக்கிரமத்தில் முறையாக பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு வசதியாகவே அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி கப்பல் மூலம் நாட்டுக்கு கிடைக்கவுள்ளது.

அதனை பயிர்ச்செய்கைக்காக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளுக்காக முறையான வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

யூரியா உரம் நாட்டுக்கு கிடைத்ததும் அது கப்பலிலிருந்து இறக்கப்பட்டு ஜூலை 07ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை அவற்றை போக்குவரத்து செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வுள்ளன.

விவசாய அமைச்சு, கமநல சேவைகள் திணைக்களம், தேசிய உரச் செயலகம், இலங்கை உர நிறுவனம், கொமர்ஷல் உர நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களினதும் ஒத்துழைப்புடனேயே மேற்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர், அதனை கருத்திற்கொண்டே அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: