விவசாயத்தில் நாம் ஏற்படுத்துகின்ற புரட்சிகரமான மாற்றமானது இலங்கையின் சரித்திரத்தில் தனித்துவமாக எழுதப்படும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நம்பிக்கை!

Monday, June 7th, 2021

எமது நாட்டின் குடிமக்களுக்கான பாதுகாப்பான உணவு என்ற கொள்கையை இறுக்கமாக கடைப்பிடிக்கத் தீர்மானித்திருப்பதாலேயே – எவரது அல்லது எதனது அழுத்தத்திற்கும் விட்டுக்கொடுக்காமல் – எமது நாட்டின் விவசாயத்தைச் சேதனப் பசளைக்கு முழுமையாக மாற்றுவதில் விடாப்பிடியாக இருப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெிவித்துள்ளார்.

குறித்த செய்திக் குறிப்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –

மேலும் தனி ஒருவருக்கு உணவு இல்லையெனின் இந்த பூலோகமே மனிதருக்கு தேவையில்லை என்றவாறு பாடினான் பாரதி என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ரரஜபக்ச, ஆனால் – ஒவ்வொருநாளும் இந்த உலகில், 69 கோடி மக்கள் பசித்த வயிற்றோடு இரவு படுக்கைக்குச் செல்கின்றார்கள் என்பது ஒரு கொடூரமான தரவாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உணவு என்பது ஒவ்வொரு மனிதரதும் உரிமை. அதிலும், குறிப்பாக, ஆரோக்கியமான, நச்சுத்தன்மையற்ற, பாதுகாப்பான உணவு என்பதே அந்த உரிமையின் உண்மையான அர்த்தம் என்பதோடு – இந்த பூலோகத்தை அடுத்த உயிரினங்களோடு் பகிர்ந்து வாழ்கின்ற நாம் ஒவ்வொருவருமே, அடுத்தவர்களின் அந்த தூய உணவுக்கான உரிமையை மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு எமது நாட்டின் விவசாயத்திலும், எமது மக்களின் உணவுப் பழக்கத்திலும் நாம் ஏற்படுத்துகின்ற புரட்சிகரமான மாற்றமானது – இலங்கையின் சரித்திரத்தில் தனித்துவமாக எழுதப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை உடல் ஆரோக்கியமும் மனச் செழுமையும் சிந்தனைப் பொலிவும் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் – எமது அரசாங்கத்தோடு கைகோர்க்குமாறு எம் நாட்டு விவசாயப் பெருமக்கள் அனைவரையும், இன்றைய நாளில் அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: