விளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும்போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம் குறைவடையும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Tuesday, March 2nd, 2021

விளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும் போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம் குறைவடையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆற்றல் மிகுந்த சந்ததியினருக்காக ‘கிராமத்திற்கு மைதானம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 332 கிராமிய விளையாட்டு மைதானங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி செய்யும் நிகழ்வில் பங்கேற்றபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய விளையாட்டுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, நாட்டில் புதிய விளையாட்டு கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த தேசிய வேலைத்திட்டம் செயற்படுத் தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விளையாட்டிற்காக நாம் இன்று இச்சந்தர்ப்பத்தில் நாடு முழுவதும் காணப்படும் 332 விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தியை ஆரம்பித்துள்ளோம். 

இளைய தலைமுறையினர் மற்றும் குழந்தைகள் மீது சுமத்தப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன என்பது உங்களுக்கு தெரியும். இளைய தலைமுறையினருக்கு பொறுமை இல்லை என பெற்றோர் கூறுகின்றனர். மேலும், இளைய தலைமுறையினர் குறுகிய சுயநலம் மிகுந்த எண்ணம் கொண்டவர்கள் என்றும் சமூக உணர்வற்றவர்கள் என்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணினிகளுக்கு அடிமையாகி உள்ளதாகவும் மற்றொரு தரப்பினர் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு குற்றம் சாட்டுகின்றார்களே தவிர அதற்கான காரணம் குறித்து ஆராய்வதற்கு நாம் பழக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர்  இந்நாட்டின் பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கு சிறந்த நடவடிக்கையாக இது அமையும் என்று நான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விளையாட்டு என்பது காலத்தை வீணடிக்கும் ஒரு செயல் என இன்றைய எமது சில பெற்றோர்கள் நினைக்கின்றனர். ஆனால் விளையாட்டுக்கு இன்று அதிக கேள்வி உள்ளது.

இதற்கு உதாரணமாக சுமார் ஒரு வாரம் முன்னதாக எமது நாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வந்திருந்தார். அவர் அரசியலுக்கு வந்து தனி கட்சி அமைத்து பணியாற்றி பல ஆண்டுகள் தோல்வியடைந்து அவை அனைத்தையும் தாங்கிக் கொண்டிருந்தாக குறிப்பிட்டார்.

அக்காலத்தில் அவரை பார்த்து பலரும் நகைத்தனராம். எனினும் அவர் பொறுமையாக கையாண்டு இறுதியில் பாகிஸ்தானின் பிரதமரானார். அவருக்கு மைதானத்தில் கிடைத்த அனுபவமே அவ்வாறானதொரு பயணத்தை அடைவதற்கு தாக்கம் செலுத்தியது என இம்ரான் கான் அவர்கள் குறிப்பிட்டார்.

எமக்கும் அப்படித்தான். நாம் வாழ்க்கையில் தோல்விக்கு முகங்கொடுத்த பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. 2015 ஜனவரி 08 ஆம் திகதி நாம் தோல்வியடைந்து வீடு சென்றோம். எமது கட்சியை நாம் இழந்தோம். இந்நாட்டின் பிரதான இரு கட்சிகளுக்கு அப்பால் நாம் ஒரு கட்சியை கட்டியெழுப்பினோம்.

கட்சியை கட்டியெழுப்பி 4 வருடங்களுக்குள் அனைத்து சவால்களை வெற்றி கொண்டு நாம் மீண்டும் நாட்டின் ஆட்சியை கைப்பற்றினோம். சிறு பராயத்தில் விளையாட்டில் ஈடுபட்டு பொறுமையை போன்றே தோல்வியையும் பழகியமையாலேயே எம்மால் அவ்வாறு செய்ய முடிந்தது என்று நான் நம்புகின்றேன்.

நாங்கள் போரை வென்றபோது எங்களுக்கு தேவையான பொறுமையையும் போர்க்குணத்தையும் விளையாட்டே எமக்கு பெற்றுக் கொடுத்தது என்று நான் கூற வேண்டும்.

அதனால் இன்று நாம் அனைத்து விதத்திலும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் மைதானங்களை நோக்குகின்றோம் என்பது உங்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன்.

இன்றுமுதல் நாம் இந்நாட்டிலுள்ள பாடசாலை மைதானங்களை மேம்படுத்துவோம். அதேபோன்று பொது விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவோம். அதுமட்டுமின்றி கிராமங்களில் புதிதாக சிறியளவிலான விளையாட்டு மைதானங்களை நிர்மாணிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுக்க நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.

நமது நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர் என்பதை நான் இந்நாட்டின் பெற்றோருக்கு கூற வேண்டும். நான் அமைச்சராக இருந்தாலும், எதிர்க்கட்சி தலைவர், பிரதமர், ஜனாதிபதி என எப்பதவியில் இருந்தாலும் நாமல் விளையாட்டுக்களில் ஈடுபடும் போது நான் மைதானத்திற்கு பார்வையாளராக சென்றுள்ளேன். சிறு பராயம் முதல் அனைத்து போட்டிகளுக்கும் நான் சென்றுள்ளேன். 6-9 வயதிருக்கும்போது தான் தொடங்கினார். அன்று முதல் அனைத்து போட்டிகளையும் பார்வையிட சென்றுள்ளேன்.

ஏனெனில் மைதானத்தில் கிடைக்கும் அனுபவம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். தற்போது நாமல் றகர் மைதானத்தில் ஓடுவதைவிட விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற பதவியுடன் ஓடுகின்றார் என நான் நினைக்கின்றேன். பாடசாலை காலத்தில் விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டதன் மூலமே அவருக்கு சேவையாற்றுவதற்கான பலம் கிடைத்துள்ளது என நாம் நம்புகின்றேன்.

இந்நாட்டின் அனைவரும் அதே கண்ணோட்டத்தில் விளையாட்டை நோக்க வேண்டும். இது தொடர்பில் உங்களதும், நாட்டினதும், தேசத்தினதும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: