விளையாட்டு பயிற்சிக்கூடக் கட்டடத்தொகுதியை நுவரெலியாவில் அமைக்க நடவடிக்கை!

Tuesday, August 8th, 2017

நுவரெலியாவில் உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய விளையாட்டு பயிற்சிக்கூடக் கட்டடத்தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய நுவரெலியாவின் குதிரைப்பந்தயத்திடல் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சொந்தமான 34.5 ஹெக்டயர் காணியிலேயே இந்த பயிற்சிக்கூடம் அமைக்கப்படவுள்ளது.

இரண்டு உள்ளக விளையாட்டரங்குகள், உடற்பயிற்சி மத்திய நிலையம்,நவீன வசதிகளுடனான உள்ளக நீச்சல் தடாகம், மீண்டும் களற்றி பொருத்தக்கூடிய விளையாட்டரங்கு வசதி, விரிவுரை அறை, களஞ்சிய வசதி, வைத்திய மத்திய நிலையங்கள், 200 வீரர்களுக்கு ஒரே தடவையில் தங்கியிருப்பதற்கான தங்குமிட வசதி மற்றும் தொடர் மாடி வீடுகளும் இதில் அமையவுள்ளன.

மெய்வல்லுனர், கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், கிரிக்கெட், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹொக்கி, வலைப்பந்தாட்டம், றக்பி, நீச்சல், டென்னிஸ், பெட்மிண்டன் உள்ளிட்ட 14 விளையாட்டுகளுக்கான வசதிகளைக்கொண்டதாக இந்த விளையாட்டு பயிற்சிக் கூடம் அமையவுள்ளன.இதற்கான ஒப்பந்தம் விளையாட்டுத்துறை அமைச்சுக்கும், பிரான்ஸ் நாட்டின்  Ellipse project SAS நிறுவனத்திற்குமிடையில்  கைச்சாத்திடப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் டி.எம்.ஆர்.பி திஸாநாயக்க மற்றம் எலிப்ஸ் நிறுவனத்தின் தலைவர் பிகாடி ஒலிவர் ஆகியோர் வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இதுதொடர்பான நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் பிரதியமைச்சர் எச்.எம் ஹரீஸ் ஆகியோரின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.சுமார் 13 மில்லியன் ரூபா செலவில் இப்புதிய திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த பணத்தை 13 வருடங்களுக்குள் மீள கொடுப்பனவு செய்யும் முறையில் கடனாக வழங்கவதற்கு Ellipse project SAS  நிறுவனம் முன்வந்துள்ளது

Related posts: