விலைச்சூத்திரத்துக்கமைய ஜூன் 24 இல் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் – தரையிறக்கப்படும் எரிவாயு சுகாதார உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமையளிக்குமாறும் உத்தரவு!

Wednesday, June 15th, 2022

எரிபொருள் தொடர்பில் அறிமுகம் செய்துள்ள விலைச் சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலைகள் ஜூன் 24 இல் திருத்தப்படும் என தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டி.யு.கே மாபா பத்திரன எரிபொருள் விலைகளுக்கேற்ப மின்கட்டணத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .

உலகச் சந்தையின் எண்ணெய் விலைகள் உட்பட பல காரணிகளை மீளாய்வு செய்ததன் பின்னர், எரிபொருள் விலைகள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதாந்தம் உரிய விலைச் சூத்திரத்துக்கமைவாக மாற்றியமைக்கப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன இணையத்தளம் மற்றும் செயலி என்பனவற்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் இன்றைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளார்.

எனவே, ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

இதேநேரம் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று நாளையதினம் நாட்டை வந்தடைய உள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும் அந்தக் கப்பல் மூலம் கொண்டு வரப்படும் எரிபொருள், மின்சாரம் பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு உதவுவதற்காக தெரிவான ‘லிஸாட் மற்றும் க்ளிஃபோட் சான்ஸ்’ நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டுக்கு வந்துள்ள கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் 3,500 மெற்றிக் டன் எரிவாயுவை வைத்தியசாலைகள், உணவகங்கள், தகன சாலைகள் என்பனவற்றுக்கு வழங்ககுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தாம் கூறியதைப் போன்று, இந்த 3 வாரங்கள்தான், எரிபொருளுக்கு மிகவும் கஷ்டமான காலமாகும். குறிப்பாக எரிவாயுவையும், எரிபொருளையும் பெற்றுக்கொள்ளவதற்காக உள்ள வரிசைகள் மூலம் அந்த கஷ்டநிலை தெரிகிறது.

எரிவாயுடன் ஒரு கப்பல் வந்துள்ளது. அந்தக் கப்பலில் 3,500 மெட்ரிக் டன் எரிவாயு உள்ளது. அந்த எரிவாயுவானது, குறிப்பாக மொத்த விலைக்கு கொள்வனவு செய்த வைத்தியசாலைகள், உணவகங்கள் மற்றும் தகன சாலைகளுக்கு வழங்கப்படும்.

அதன் பின்னர் வரும் கப்பல்கள் மூலம், 4 மாதங்களுக்கு எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள எமக்கு வாய்ப்பு கிடைக்கும். தற்போதுள்ள நிலைமையின் படி, அதனைப் பெற்றுக்கொள்ள 14 நாட்களாகும்.

எனினும், அதற்கு முன்னர் ஒரு கப்பலையேனும் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுகாதார உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமையளித்து எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்..

கட்டணம் செலுத்தப்படாமை காரணமாக 7 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்தது.

நேற்றிரவு அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, எரிபொருள் விநியோகம் இன்னும் நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக இலங்கை கனிய எண்ணெய் தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகம் தொடர்பில் அதனுடன் தொடர்புடைய பிரிவுகளால் உரிய அறிவுறுத்தல்கள் எவையும் இன்னும் விடுக்கப்படவில்லை என அந்த சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றதை அவதானிக்கக் கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: