விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ள பயங்கரவாத தடைச் சட்டம்!

Wednesday, August 24th, 2016

பயங்கரவாத தடைச் சட்டம் விரைவில் ஒழிக்கப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டமாக மாற்றப்படும் என சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழ் சந்தேகநபர்கள் தொடர்பில் 78 வழக்குகளை, செப்டம்பர் 15 ஆம் திகதி மறுபரிசீலனை செய்யுமாறு சட்டமா அதிபர் திட்டமிட்டிருந்தார் என்று சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வுமீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்வது தொடர்பிலும் அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குவது தொடர்பிலும் மறுபரிசீலனை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பரசீலனை செய்யப்படாமல் இருக்கும் வழக்குகள், பயங்கரவாத தடைச் சட்டம் ஒழிக்கப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டமாக மாற்றப்படும் போதே பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 16 வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து ஆலோசனை பெறப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த வருடம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்காக புனர்வாழ்வு தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2015.11.11 ஆம் காலப்பகுதியில் இருந்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 39 சந்தேகநபர்களை சட்டமா அதிபரின் அனுமதியினுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழுள்ள வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மூலம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தண்டனைகளை குறைக்கும் முகமாக 3 வழக்குகள் இந்த மாதம் பரிசோதிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: