விரைவில் புதிய ‘வற்’வரி சட்டமூலம்! – பிரதமர்

Wednesday, August 10th, 2016

புதிதாக வற்வரி (பெறுமதி சேர் வரி) தொடர்பான சட்ட மூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தள்ளார். வற் வரி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தலைசாய்ப்பதாக குறிப்பிட்ட அவர் நீதிமன்ற அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருப்பதாகவும் இதுகாலவரை பின்பற்றப்பட்டு வந்த சம்பிரதாயத்துக்கு முரணாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் திருப்தி இல்லாத போதும் நீதிமன்றத்துடன் மோதவோ பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரவோ தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

வற் வரி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வற் வரி மீதான விவாதம் இன்றும் (10) நாளையும் (11) நடைபெற ஏற்பாடாகியிருந்தது. இந்த நிலையிலே வற் வரிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனாதிபதிக்கும் ,சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட பிரதமர்:

உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆராய்ந்து நாடாளுமன்றம் முடிவு எடுக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் சட்டமொன்று நிறைவேற்றப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது.

ஆனால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ் வரி, பணம் செலுத்தாமை என்பன தொடர்பில் அடிப்படை உரிமை வழக்கு தொடர முடியும். அரசியலமைப்பின் 152 ஆவது சரத்தின் பிரகாரம் மக்களின் வருமானத்துடன் தொடர்புள்ள சட்ட மூலங்கள் அமைச்சரவையினூடாக அனுமதிக்கப்பட வேண்டும்.

இது தவிர நிலையியற் கட்டளையில் 132 இன் பிரகாரம் அமைச்சரவையின் அனுமதி குறித்து குறித்த அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். இந்த இரு சரத்துகளும் கட்டாயமானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனை இந்த அரசாங்கம் மட்டுமன்றி கடந்த அரசாங்கங்களும் பின்பற்றின. சட்ட மா அதிபரின் அனுமதி கிடைத்ததும் நாடாளுமன்றத்திற்கு இவை முன்வைக்கப்பட்டன.

அமைச்சரவையின் அனுமதி கிடைத்தாலோ அமைச்சரவையின் பணிப்பிற்கமைவாகவும் அனுமதி பெறப்பட்டதாலும் அந்த முறையும் ஏற்கப்பட்டது. அமைச்சரவையினூடாக நாடாளுமன்றத்திற்கும் நாடாளுமன்றத்தினூடாக பொதுமக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும். சட்ட மூலம் குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு அமைச்சரவையினூடாக உரிய வழிவகைகளை பின்பற்றியுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும். சட்ட மூலம் சமர்ப்பிப்பது தொடர்பான அமைச்சரவையின் முடிவு இது தொடர்பான செயற்பாட்டின் ஆரம்பமாகும்.

அமைச்சின் செயலாளரின் உறுதிப்படுத்தல் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு போதுமானது. வேறு ஏதும் விசாரணை நடத்துவதானால் அதனை நாடாளுமன்றத்தினூடாகவே மேற்கொள்ள வேண்டும்.

சட்ட மூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கையில் அதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருப்பதாக சம்பந்தப்பட்ட அமைச்சர் அறிவிக்கும் சம்பிரதாயம் நிலையியற் கட்டளையில் உள்ள போதும் இது அமுலில் இருக்கவில்லை. கடந்த நாடாளுமன்றங்களிலும் இதேபோன்ற சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டன .சபையும் அதனை ஏற்றே செயற்பட்டது.

நிலையியற் கட்டளை பின்பற்றப்பட்டுள்ளதா இல்லையா என்பது நாடாளுமன்றத்தின் உள்ளக விவகாரமாகும். அது தொடர்பில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது சபாநாயகராவார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையியற் கட்டளையின் 133 ஆவது நிலையை ரத்துச் செய்ய நாடாளுமன்றத்திற்கு அதிகாரமுள்ளது. இதனூடாக நாடாளுமன்றத்தின் உரிமை இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் இது வரை பின்பற்றி வந்த சம்பிரதாயத்துக்கு முரணாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்கவும் தீர்ப்பிற்கும் இது முரணானதாகும். இது நாடாளுமன்றத்திற்குரிய பொறுப்பாகும்.

இந்த தீர்ப்பினூடாக கடந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் குறித்து சபாநாயகர் அறிவிப்பொன்றை வெளியிட வேண்டும். எமக்குள் மோதல் ஏற்படுத்த தேவையில்லை. பூர்வாங்க நீதிமன்ற அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே இருக்கிறது.

உரிய முறைமை பின்பற்றப்படவில்லை என உச்ச நீதிமன்றம் கூறுவதானால் நாம் மீள அமைச்சரவையினூடாக இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்க இருக்கிறோம். நிலையியற் கட்டளையின் 133 ஆவது சரத்தின் பிரகாரம் குறித்த சட்டமூலத்தை அமைச்சரவை அனுமதியுடன் சமர்ப்பிப்பதாக அமைச்சர் அறிவிக்க வேண்டும். கடந்த காலத்தில் (தினேஸ் குணவர்தன) ஆளும் தரப்பு பிரதம கொரடாவாக இருந்த போது இவ்வாறு அறிவிக்காமல் இத்தனை சட்ட மூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பட்டியல் தயாரித்து வருகிறோம். அவருக்கும் இந்த விடயம் மறந்திருந்தது.

பல சட்ட மூலங்கள் இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் நாடாளுமன்றத்துக்கிருந்த நிதி குறித்த அதிகாரம் பறிக்கப்பட்டது. நல்லாட்சி அரசு அதனை மீள வழங்கியுள்ளது.

வழக்கு தொடர்ந்தாவது இவ்வாறானவற்றை நிறுத்த இன்று அவகாசம் இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் எமக்கு திருப்தி இல்லாத போதும் நாம் நீதிமன்றத்துடன் மோதவோ பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரவோ தயாரில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு தலைசாய்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்..

Related posts: