வியாக்கியானம் என்ற போர்வையில் நாட்டின் சட்டத்தை கட்டுப்படுத்தவும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்தவும் சிலர் முயற்சிக்கின்றனர் – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!
Tuesday, March 5th, 2024சில சட்டத்தரணிகள் வியாக்கியானம் என்ற போர்வையில் நாட்டின் சட்டத்தை கட்டுப்படுத்தவும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்தவும் முயற்சிக்கின்றனர். அவ்வாறு செய்ய முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளம் சட்ட வல்லுநர்களுடன் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற “வட்ஸ் நியூ” எனும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்..
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
சரிந்த நாட்டை ஓரிரு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திற்குள் உயர்த்த முடிந்தது. ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள், நம் நாட்டின் வங்குரோத்து நிலை சட்டப்பூர்வமாக முடிவுக்கு வரும். ஆனால் வாங்கிய கடனை மீளச் செலுத்த வேண்டும். அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த வேண்டும்.
இதற்கான சட்டத்தைப் நாடாளுமன்றத்தில் கொண்டு வருவோம். அந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட பிறகு, உயர் நீதிமன்றத்துக்குச் சென்று, அவற்றை ஆராய்ந்த பின்னர் நிறைவேற்ற வேண்டும்.
இந்த சட்டத்தை சிலர் தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர். ஒரு சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அதை மீண்டும் இரத்து செய்ய முடியாது. அது தொடர்பில் செயல்படாமல் இருக்க முடியாது. சில சட்டத்தரணிகள் வியாக்கியானம் என்ற போர்வையில் நாட்டின் சட்டத்தை கட்டுப்படுத்தவும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்தவும் முயற்சிக்கின்றனர். அவ்வாறு செய்ய முடியாது.
இந்த நாட்டின் நாடாளுமன்றத்தின் அதிகாரம் 1972 இல் நிறுவப்பட்ட அரசியலமைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதற்கு முன் பிரித்தானிய அரசியலமைப்பு இருந்தது. ரணசிங்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணையாளர், லியனகேவுக்கு எதிரான ராணி போன்ற வழக்குகளின் பிரகாரம் அவற்றை மாற்ற முடியாது.
அதன்படி, 1970இல், அரசியலமைப்புச் சபையொன்றை அறிமுகம் செய்து புதிய அரசியல் சாசனத்தைத் தயாரிப்பதற்கான ஆணையை அன்றைய அரசு பெற்றது. அந்தச் சட்டத்தின் ஊடாக மக்கள் இறைமையுள்ள தேசிய ராஜ்ய சபையினால் நாடாளுமன்றத்தை செயற்படுத்த கொல்வின் ஆர் டி சில்வா ஒப்புக்கொண்டார்.
அதன்படி, நாடாளுமன்றத்திற்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தது. அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு பொறுப்பாக இருந்தது. சட்டமியற்றும் அதிகாரம் மற்றும் நீதித்துறை அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது. அதன் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனை 1977 இல் கொல்வின் ஆர். டி சில்வா அறிமுகப்படுத்தினார். ஆங்கிலேய சட்டத்தின் பிரகாரம் நாங்கள் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.
1977 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தியபோது அது மாறியது. அதன்படி, மக்களின் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற விடயங்கள் மாற்றப்படவில்லை. மேலும், சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் நாடாளுமன்றம் என்பன முன்னிலையில் இருந்தன. மேலும் அதில் அடிப்படை உரிமைகளும் இடம் பெற்றிருந்தன. இந்தப் பணியை நாடாளுமன்றம் செய்ய வேண்டும்.
ஜனாதிபதி அமைச்சரவையை நியமிக்கும் போது, அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். அது மாறவில்லை. அதன்படி, இப்போது அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றம் தான் பிரதான அதிகாரமும் சர்வஜன வாக்குரிமையும் தான் முதன்மையானவை. மற்ற அனைத்தும் இரண்டாம் நிலையில் உள்ளன. மேலும், ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு இன்று நிறைவேற்று அதிகாரங்கள் உள்ளன. நாடாளுமன்றத்தினால் அதை இரத்து செய்யலாம். ஆனால் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களைப் நாடாளுமன்றத்தால் நீக்க முடியாது.
அன்று கொல்வின் ஆர். டி சில்வா நாடாளுமன்றத்தில் சோசலிசத்தை கொண்டு வந்தார். ஜே.ஆர். ஜெயவர்தன திறந்த பொருளாதாரத்தை கொண்டு வந்தது போல் நாமும் இந்த பாதையில் முன்னேற முயற்சிக்கிறோம். கொல்வின் ஆர் டி சில்வா மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்தனவும் ரோயல் கல்லூரியில் ஒரே வகுப்பில் கற்றவர்கள். அவர்கள் ஒரே மாதிரியாக சிந்தித்தார்கள். எனவே, நாடாளுமன்றத்தின் இறையாண்மை எப்போதும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எனவே இப்போது நாம் இங்கிலாந்து நீதிமன்றத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும். இவற்றை யாரேனும் கட்டுப்படுத்த முயன்றால், அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் மற்றும் நீதித்துறை அதிகாரங்களின் முன் இது குறித்து விசாரணை செய்யலாம். இவற்றை நிறுத்த முடியாது. மக்கள் மேலும் துன்பப்பட இடமளிக்க முடியாது.
இவற்றை மனித உரிமைகள் என்று யாராவது கூறினால், மக்களின் வாழ்வுரிமை தான் முதல் மனித உரிமை. இரண்டாவது மனித உரிமை, பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதாகும். ஏனைய விடயங்கள் அதன் பின்னரே வருகின்றன. நீங்கள் விரும்பும் அரசியலை செய்யுங்கள். ஆனால் இந்த மாற்றம் நிகழ வேண்டும். இல்லையெனில் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. அதனால்தான் உங்கள் பங்களிப்பை நான் கேட்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|