வித்தியா கொலை வழக்கு யாழிலேயே நடத்தப்படும்?

Tuesday, May 23rd, 2017

புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கினை யாழ்ப்பாணத்திலேயே நடத்துமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த வழக்கை எங்கே நடத்துவது என்பது தொடர்பான முடிவுகள் இவ் வாரத்திற்குள் வெளிவர இருப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன. புங்குடுதீவு மாணவியான சிவலோகநாதன் வித்தியா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாடசாலை செல்லும் போது கடத்தி செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இப்படுகொலை தொடர்பில் 12 சந்தேக நபர்கள் விசாரணைகளினூடாக பொலிஸாராலும் பின்னர் குற்றப் புலனாய்வு பிரிவினராலும் கைது செய்யப்பட்டிருந்தனர்.  இவ்வாறு கைது செய்யப்பட்ட 12 சந்தேக நபர்களுக்கும் எதிராக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் வழக்கானது இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்று வழக்கு விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டது.  முடிவுறுத்தப்பட்ட வழக்கின் விசாரணை கோவைகள் சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கின் பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது சந்தேகபர்களை சட்டமா அதிபர் திணைக்களமானது வழக்கில் இருந்து விடுதலை செய்திருந்தது.

அத்துடன் பதினொராவது சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்டிருந்தார். தொடர்ந்து குறித்த வழக்கின் குற்றப்பத்திரமும் அதனுடான ஆவணங்களும் சட்டமா அதிபரால் யாழ்.மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.  எனினும் குறித்த வழக்கை கொழும்புக்கு மாற்றுவது தொடர்பாக உயர்மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலே இவ் வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரமானது யாழ். மேல் நீதிமன்ற பதிவாளரால் இரும்பு பெட்கத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் குறித்த வழக்கை கொழும்புக்கு மாற்றாது யாழ்ப்பாண மேல் நீதிமன்றிலேயே நடத்துமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் வழக்கை நடத்துவதற்காக மூன்று தமிழ் நீதிபதிகளையும் நியமிக்குமாறும் சட்டமா அதிபர் பிரதம நீதியரசரை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.  இந்நிலையில் குறித்த வழக்கை யாழ்ப்பாணத்திலா அல்லது கொழும்பிலா ரயல் அட் பார் தீர்ப்பாயத்தில் நடத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலானது இவ் வாரத்திற்குள் வெளிவரும் என சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: