வித்தியா கொலை வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன் விசாரணை!

Wednesday, November 9th, 2016

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கின் 9 சந்தேக நபர்களின் விளக்கமறியலை மேலும் 3 மாத காலத்திற்கு நீடித்து யாழ் மேல் நீதிமன்றம் புதன்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒன்று தொடக்கம் ஒன்பது வரையிலான சந்தேக நபர்களின் விளக்கமறியலை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என சட்டமா அதிபரின் பிரதிநிதியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்து அரச சட்டவாதி நாகரட்னம் நிசாந்தன் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் விளக்கமறியலை நீடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. விளக்கமறியல் நீடிக்கப்படக் கூடாது என விண்ணப்பம் செய்தனர்.

சந்தேக நபர்கள் கடந்த 18 மாதங்களாக விளக்கமறியலில் இருந்து வருகின்றார்கள். எனவே அவர்களுக்கு மன்று பிணை வழங்க வேண்டும் என்று சந்தேக நபர்கள் தர்பபு சட்டத்தரணிகள் கோரினர்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி மணிவண்ணன், இந்த மாணவியின் மரணம் யாழ்ப்பாணத்தைக் கலவர பூமியாக்கியது. நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்;டது இவர்களைப் பிணையில் விட்டால் மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பலைகள் ஏற்படும் என தெரிவித்து பிணை வழங்கக் கூடாது என ஆட்சேபணை தெரிவித்தார்.

அரச சட்டவாதி நிசாந்தன் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. விசாரணைகள் முற்றுப்பெற்றதும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்து, சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்கக் கூடாது என கடும் ஆட்சேபணை தெரிவித்தார்.

முத்தரப்புக்களின் சட்டத்தரணிகளினது விண்ணப்பம் மற்றும் ஆட்சேபணைகளை செவிமடுத்த நீதிபதி இளஞ்செழியன் பள்ளி மாணவி ஒருவர் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்த வழக்கு பாரதூரமானது என தெரிவித்து, சந்தேக நபர்களின் விளக்கமறியலை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்து உத்தரவிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

சந்தேக நபர்கள் 18 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது, கவனத்திற் கொள்ள வேண்டிய ஒன்று. இருப்பினும் இது ஒரு பாரதூரமான வழக்கு. பள்ளி மாணவி குழு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு. எனவே, இது சம்பந்தப்பட்ட விசாரணைக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடியவடையவில்லை என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். வழக்கொன்றில் விசாரணைகள் முடியவில்லை என தெரிவித்து, சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடிக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் தகுந்த காரணங்களை முன்வைத்து விண்ணப்பம்; செய்தால், அந்த விண்ணப்பத்திற்கு மதிப்பளித்து கட்டளை பிறப்பிக்க வேண்டும் என சட்டம் பரிந்துரைக்கின்றது.

எனவே, இந்த வழக்கில் மிக விரைவாக வழக்கு விசாரணைகளை முடிவுறுத்தி, சட்டமா அதிபருடன் கலந்துரையாடல் செய்து விரைவாக குற்றப்பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு அரச சட்டவாதிக்கு மன்று பணிக்கின்றது. சந்தேக நபர்களுடைய பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு எதிர்வரும் 08.02.2017 வரை மேலும் 3 மாதங்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்படுகின்றது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.

பிணை மனு மீதான யாழ் மேல் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஊர்காவற்றுறை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.இச்சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தின் எதிரிக் கூண்டில் நின்ற 4 ஆவது சந்தேக நபர், ஒரு குற்றமும் செய்யாமல் தன்னைத் 18 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உரத்த குரலில் தெரிவித்தார்.

அந்த சந்தேக நபரைக் கடுமையாக எச்சரிக்கை செய்த நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்ற வழக்கை அவமதிக்கும் வகையில் மன்றில் குரலை உயர்த்திப் பேசுவது சிறைத்தண்டனைக்குரிய நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும். அத்தகைய குற்றத்திற்கு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று கடும் தொனியில் சுட்டிக்காட்டினார்.இந்த வழக்கின் அடுத்த தவணை தினமாகிய 08.02.2017 ஆம் திகதி சந்தேக நபர்களை மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

viththija_26102015_2

Related posts: