வித்தியா கொலை வழக்கு : எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Thursday, July 20th, 2017

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் இரண்டாம் கட்டமாக நடைபெற்றது.

இதில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகியோர் தலைமையிலான நீதாய தீர்ப்பாயத்தின் முன் விசாரணை நடைபெற்றது.

இதன்போது ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எம்.என்.ரியால் மற்றும் ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி (IP) நிஷாந்த சில்வா இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீதாய தீர்ப்பாயத்தினால் ஏகமனதாக பணிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நீதாய தீர்ப்பாயத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்பார்வையாளர் சாட்சியமளிக்கையில்

2015ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தேன்.

வித்தியாவின் தாயார் மற்றும் பல தரப்பினரிடம் வாக்குமூலம் பெற்றதுடன், சட்டத்தரணியும், கொழும்பு சட்டத்துறை விரிவுரையாளர் தமிழ்மாறனிடமும் அவரது மகனிடமும் வாக்குமூலத்தினை பெற்றுக்கொண்டேன்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பல்வேறு கோணத்தில் மேற்கொண்டிருக்கின்றேன். வித்தியாவின் சடலம் இருந்த நிலைமை பல்வேறு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், கவலையும் அளித்தது. சடலம் ஆடைகள் எதுவுமின்றி கால்கள் அகல விரிக்கப்பட்டு மரத்தில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. சடலத்தினைப் பார்க்கும் போது, எந்தவொரு மனிதனுக்கும் கவலையை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அதன் பிரகாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கூட்டுக்கொள்ளைச் சம்பவ பொறுப்பதிகாரி மூலம் அனுமதி கோரி, பிரதிப் பொலிஸ்மா அதிபரின் மூலம் பாதுகாப்பு அமைச்சரின் கட்டளை பெற்று, பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி  குறித்த நபர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான கட்டளையினைப் பிறப்பித்தார்.

அதன் பிரகாரம் 12ம் திகதி ஜூன் மாதம் முதல் 19ம் திகதி ஜூன் மாதம் வரை தடுப்பு காவலில் வைத்து சந்தேகநபர்கள் 9 பேரிடமும் விசாரணை மேற்கொண்டோம்.

அதன் பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றின் அனுமதியுடன் 30 நாட்கள் மீண்டும் தடுப்புக் காவலில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மீண்டும் 30 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி பெறப்பட்டது. கொழும்பு பிரதான நீதிவானின் அனுமதியுடன் அந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் மீண்டும் ஊர்காவற்துறை நீதிமன்றில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தடுப்புக் காவல் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா தொடர் விசாரணைகளை மேற்கொண்டார் என மன்றில் சாட்சியமளித்தார்.

அதன் பின்னர் 1, 2, 3 மற்றும் 6, 9 ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மகிந்த ஜெயரட்ன குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார்..

7ஆம் எதிரியின் வீட்டில் 4 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா என்னிடம் தெரிவித்தார். எதிரிகளிடம் மடிக்கணினி மற்றும் தொலைபேசிகள் கைப்பற்றபட்டன. பூரண தகவல்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வாவிடம் இருக்கின்றதாக சாட்சியமளித்தார்.

தொலைபேசி மற்றும் மடிக்கணினிகளை மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் சேர்ட் நிறுவனத்திடம் பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டன.

பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா பகுப்பாய்வு தொடர்பாக தொடர் விசாரணைகளை மேற்கொண்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் ஏன் விசாரணைகளை மேற்கொண்டீர்கள்?

இன மத முரண்பாட்டினை ஏற்படுத்தும் செயற்பாட்டினை மேற்கொள்வதற்காக சந்தேகநபர்கள் செயற்படுவதற்கு முயற்சிப்பதாக மிகவும் உறுதியான சந்தேகம் இருந்தது. அதனால், பங்கரவாத தடைச்சட்டத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு உத்தரவு பெறப்பட்டது என சாட்சியமளித்தார்.

ஏதாவது இன மத ரீதியான வித்தியாசம் காணப்பட்டதா?

சடலம் காணப்பட்ட நிலை, மற்றும் நிர்வாணமாக கால்கள் இரண்டும் கட்டப்பட்டிருந்த விதம் அவற்றினை வைத்து இன மத ரீதியான முரண்பாட்டினை ஏற்படுத்துவதாக காணப்பட்டது.

சாட்சி உங்களுடைய விசாரணைக்குழுவிற்கு லஞ்சம் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக எவ்வாறு தெரியவந்தது?

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இப்ரான் என்ற கைதிக்கு 9ஆவது சந்தேகநபர் மகாலிங்கம் சசிக்குமார் (சுவிஸ்குமார்) வழங்கிய தகவலின் பிரகாரம் உறுதிப்படுத்தப்பட்டது.

பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வாவிற்கு 20 மில்லியன் ரூபா வழங்குவதாகவும் கோரியதாக தன்னை அரச சாட்சியாக மாற்றுமாறும் கோரியிருந்தார்.

அதனடிப்படையில் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது. விசாரணைகளை மேற்கொண்டவர் பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா அவரிடம் தான் கேட்க வேண்டும்.

அதன்போது, நீதிமன்றினை பிழையாக வழிநடத்துவதாக எதிரிகள் சார்பில் குறுக்கு விசாரணை செய்த சட்டத்தரணி குற்றஞ்சாட்டிய போது,

கடந்த 30 வருடங்கள் சேவையில் இருக்கின்றேன். பல நீதிமன்றங்களில் சாட்சியமளித்துள்ளேன். இருந்தும் எந்த வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகவில்லை” என குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்பார்வையாளர் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

குறுக்கு விசாரணை நிறைவு பெற்ற பின்னர்,

இதன்பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் சாட்சியம் பெறுவதற்கான காலம் போதாமையினால் எதிர்வரும் 24ம் திகதி 35வது சாட்சியான பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வாவையும், ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எம்.என்.ரியாலையும் மன்றில் ஆஜராகுமாறு நீதாய தீர்ப்பாய நீதிபதிகளினால் ஏகமனதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, எதிர்வரும் 24ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இந்திய அரசு குறித்து த.தே.கூட்டமைப்பின் உண்மை நிலைப்பாடு என்ன? - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக ந...
வருடாந்தம் 25 ஆயிரம் இலங்கையர்கள் புகைத்தலால் உயிரிழப்பு!
உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை!
தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான சுற்றுநிரூபம்!
போதைப்பொருள் பாவனை பரவலடைவது தொடர்பான தேசிய ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம்!