வித்தியா கொலை: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Wednesday, June 1st, 2016
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பன்னிரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த வழக்குத் தவணையின் போது மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு , பொலிசாரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் எவ்வாறு கொழும்புக்கு தப்பி சென்றார் என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்பிக்க ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.றியாழ் உத்தரவிட்டிருந்தார்.

அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அடுத்த தவணையில் அறிக்கைகளை சமர்ப்பிப்பதாக குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் இன்றைய தினம் பதில் நீதிவானிடம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பன்னிரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.