வித்தியாவின் தாயை மிரட்டியவர்ளுக்கு விளக்கமறியல்!
Friday, June 3rd, 2016
புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டிய இரு பெண்களையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி வியாழக்கிழமை (02) உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 4ஆம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தன்னை சந்தேக நபர்களின் உறவினர்கள் மிரட்டுவதாக புங்குடுதீவு மாணவியின் தாயார், நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து, அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு மாணவியின் தாயாருக்கு நீதவான் அறிவுறுத்தி இருந்தார். அதற்கமைய, தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம், மே மாதம் 18ஆம் திகதி மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் சந்தேக நபரின் தாயார் அவரின் மற்றுமொரு உறவினர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, மாணவியின் தாயாரை மிரட்டியவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்களை வியாழக்கிழமை (02) ஊர்காவற்துறை பொலிஸார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போதே அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
Related posts:
|
|