விதை நெல்லுக்குத் தட்டுப்பாடு !.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போக விதைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் எதிர் வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுறுத்தப்படவேண்டும் என மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் விவசாயிகள் விதை நெல்லைப் பெற்றுக் கொள்வதில் பெரிய நெருக்கடிகளை எதிர் கொண்டு வருகின்றனர். தமக்கு விதை நெல்லைப் பெற்றுத் தருமாறு மாவட்டச் செயலாளரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். விவசாயக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே விவசாயிகள் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இரணைமடுக்குளம், அக்கராயன்குளம், வன்னேரிக்குளம், கரியாலைநாகபடுவான் குளம், குடமுருட்டிக்குளம், கல்மடுக்குளம் மற்றும் புதுமுறிப்புக்குளம் ஆகிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் பெரும்போக விதைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட திகதிக்குள் விதைப்பு நிறைவு செய்யப்பட வேண்டும். குளங்களின் நீர்மட்ட உயர்வுக்கு ஏற்ப நீர் விநியோகம் இடம்பெறும். இரணைமடுக்குளத்தில் பத்தடிக்கு நீர் உயர்ந்த பின்னரே முதலாவது விநியோகத்தை ஆரம்பிப்பது என தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதேவேளை மாவட்டத்தில் விதை நெல்லுக்கு நெருக்கடி இருப்பதாக விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டது. கடந்த சிறு போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விதை நெல்லாகப் பயன்படுத்த முடியாது.
சிறுபோகச் செய்கையின் இறுதிநேரத்தில் குளங்களில் நீர்மட்டம் குறைவடைந்ததன் காரணமாக நெற் செய்கையில் பாதிப்பு ஏற்பட்டது. அவை அறுவடையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிகளவான விவசாயிகள் தமது நெல்லை விதை நெல்லுக்குப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த இரு ஆண்டுகளாக கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நெற்செய்கை முழுமையாக வெற்றியளிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே விதை நெல்லைப் பெற்றுத் தருவதற்கு மாவட்டச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரினர். அதே நேரம் இங்கு கால் நடைகளைக் கட்டுப்படுத்துவதற்கான கால அட்டவணையும் தீர்மானிக்கப்பட்டது. எதிர் வரும் 15 ஆம் திகதி தொடக்கம் 28.02.2018 வரை கால் நடைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
Related posts:
|
|