விடைபெறும் 2016……………..!

ஒரு வருடம் விடைபெறும்போது
நாம் விடுதலையாகி
இன்னொரு வருடத்திற்குள் காலடி வைப்பதாக இல்லை
எனும் நிலையிலேயே
ஒவ்வொரு வருடமும் மறைந்துபோவது வழக்கமாகிவிட்டது!
புது வருடத்திற்கான வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதா?
அல்லது –
பழைய வருடத்தின் சோகங்களைப் பகிர்ந்து கொள்வதா
என்பதில்தான் இந்த மார்கழி மாதங்கள்
கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றன!
புதுவருடம் –
நாட்காட்டிகளை மாற்றி விடுகின்றோம்
நாங்கள் மாறிவிட்டோமா?
புத்தாடைகளை அணிந்து கொள்கின்றோம்
அழுக்குகளை அகற்றிவிட்டோமா என
ஆயிரமாயிரம் கேள்விகளை எங்களுக்குள் புதைத்துக் கொண்டே
நாங்கள் புதையாமல் இருக்க வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்!
எங்களுக்கு வழி காட்டுவோர் யார்?
கடந்த வருடத்திற்குள் எல்லாம் தீருமென
அதற்கு முந்தைய வருடத்தில் கூறியவர்களா?
இல்லை –
இந்த வருடத்தில் எல்லாம் தீருமென
கடந்த வருடத்தில் கூறியவர்களா?
அதுவும் இல்லையேல் –
அடுத்த வருடத்தில் எல்லாம் தீருமென
இந்த வருடத்தில் கூறப் போகின்றவர்களா?
ஆள் மாறாட்டம் செய்யும் மோசடிக்காரர்களைப்போல்
ஒரே கூட்டம்தான் இப்படி
ஆளுக்கொன்று – நாளுக்கொன்று கூறி வருகிறது!
அந்த கூட்டத்தின் மீது ஆணையாக
இந்த வருடமும் எமக்கு இப்படித்தான் விடியுமா?…
தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாத…
எஞ்சிய
எமது மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படாத…
மீள் குடியேற்றங்கள் முற்றுப் பெறாத…
பெண் தலைமைத்துவக் குடும்பங்களின்
வாழ்க்கையும் – பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படாத…
முன்னாள் போராளிகளின் வயிறுகள் குளிராத…
முன்னாள் பெண் போராளிகளின்
திருமணங்கள் அரங்கேறாத…
வேலையற்றோருக்கான வேலைகள் கிடைக்காத…
நலன்பரி நிலைய மக்களின் நலன்கள் கிட்டாத…
இந்த வருடமும்
கடந்த வருடம் போலவே கடந்து முடிந்திடுமா?
கடல் வளம் நாளாந்தம் களவு போகும்
கேரள கஞ்சாவும் – போதைப் பொருட்களும்
ஏராளம் பழகிப் போகும்
வாள் வெட்டும் – வழிபறியும்
தோள் தொட்டுப் பார்க்கும் விதிமுறைகளாகவும்
இப்படியே இந்த வருடமும்
எதிர்பார்ப்புகளை முதுகில் சுமந்து
நிமிர முடியாத நிச்சயங்களாக கடந்து விடுமா?
ஆங்கிலத்தில் சுதந்திரம் பெற்று
சிங்களத்தில் வாசிப்பதற்காக
தமிழை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்!
ஐக்கிய நாடுகள் சபையில்
முகங்கொடுப்பதற்காக
ஐக்கியத்தை அணிந்து கொண்டு
அது முடிந்த பின்னே
அதைக் கழற்றி எரிந்துவிட்டு
ஆளுக்காள் இனவாத நிர்வாணத்தில்
ஆடிக் கொண்டிருக்கிறோம்….
இணக்கமே இல்லாத நிலையில்
நல்லிணக்கம் பற்றி பேசிக்கொண்டு
விளம்பரமாய்த் திரிகின்றோம்…
தமிழ்த் தேசியம் பேசியே
தேய்ந்துவிட்ட சமூகத்துக்கு
கையாலாகாத் தனங்களைக்கூட
இராஜதந்திரம் எனக் கற்பித்துக் கொண்டு
காலத்தைக் கடத்தும் கூட்டத்திற்கு
இன்னும் சாமரம் வீசிக் கொண்டு
இரணைமடு தண்ணீரைப் போல்
தடுத்து வைக்கப்பட்டுள்ளோம் –
வாய்ப்பேச முடியாமல்!
எமது உரிமைகள் பருவம் தப்பிய
மழையைப் போல்!
நாங்கள் வறண்ட இந்த நிலத்தைப்போல்!
ஆக –
இந்த வருடம் நிம்மதிகள் நிலைக்க
இந்த மண்ணில்
எங்கள் சொந்தங்கள் மலர
ஏதேனும் அபயக் கரமாகவேனும்
அமையுமா என்பதற்கு
பன்னிரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டுமா?
காத்திருந்து – காத்திருந்து
கடுகளவும் ஏதும் நிகழாமல் மறுபடி
அடுத்து வருடத்திற்கு அழைப்பு விடுத்துவிட்டு
அடங்கிப் போகப் போகிறோமா?…
கேள்விகள் மட்டுமே எஞ்சிய சமூகமாக
இன்னும் – இன்னும் எத்தனைக் காலம்
நாம் இருக்கப் போகின்றோம்?
Related posts:
|
|