விஜயகலாவின் புலிக்கதையால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு!

Tuesday, July 3rd, 2018

மீண்டும் புலிகளின் கை ஓங்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்த கருத்தால் இன்று (03.07.2018) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாடாளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனால் நாடாளுமன்றத்தின் சபை நடவடிக்கைகளை நாளைவரை  ஒத்திவைக்க சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.

வடக்கில் சமூகவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதால் அதைக்கட்டுப்படுத்த புலிகள் கை  மீண்டும் ஓங்க  வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருப்பதானது தனது கணவரான முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனை புலிகள் துரோகி என சுட்டு படுகொலை செய்தமை சரியானதே என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

வடக்கில் முறையற்ற வியாபார நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும்  சட்டவிரோத அரசியல்  செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் வடக்கில் எவ்விதமான அரசியல் செயற்பாடுகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும்  புலிகள் மகேஸ்வரனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் கொழும்பில் தனது அரசியல் செயற்பாடுகளை மகேஸ்வரன் மேற்கொண்டதால் புலிகளால் மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமக்கு அறிவித்தாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கை மேலோங்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பு இன்று காவற்துறை தலைமையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

Related posts: