விசாரணைக் குழு அமைத்து உடன் விசாரணை செய்யுங்கள் – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா!

Wednesday, April 11th, 2018

எமது ஆட்சிக்காலத்தில் யாழ் மாநகரசபையில் ஊழல் நடைபெற்றதாக அரசியல் உள்நோக்கம் கொண்டு செய்தி வெளியிட்டுக்கொண்டிராமல் அதற்கு உடனடியாக ஆணைக்குழுவை அமைத்து உடன் விசாரணைசெய்து அறிக்கையை வெளியிடவேண்டும் என யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணரராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ் மாநகரசபையின் புதிய ஆட்சிக்கான கன்னி அமர்வு இன்றையதினம் முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் கூடியது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் எமது ஆளுகைக்குள்ளிருந்த யாழ் மாநகரசபையின் நிர்வாகத்தில் முறைகேடுகள் இருந்ததாகவும் அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் எமது ஆளுமை மிக்க ஆட்சியின் மீது அவதூறு பூசுவதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் கூறிவருகின்றனர்.

ஆனால் யாழ் மாநகர சபை உள்ளிட்ட வடமாகாணத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் வடக்கு மாகாண சபையின் ஆளுகையின் கீழ் தான் நிர்வகிக்கப்பட்டுவருகின்றது. அந்தவகையில் குறித்த காலப்பகுதியில் ஓய்வுநிலை நீதிபதிகளைக் கொண்ட இரண்டு ஆணைக்குழுக்களை அமைத்து குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் நடத்தியிருந்தபோதிலும் அது தொடர்பில் எந்தவிதமான குற்றங்களும் அந்த குழுக்கள் மூலம் நிரூபிக்கப்படவில்லை. அதனால் அந்த அறிக்கையும் வெளியிடாது தடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இம்முறை இந்த ஆட்சியில் அதற்கான விசாரணைக் குழுவை அமைத்து அதன் அறிக்கையை வெளியிட வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Related posts: