விசாரணைக்குழு அறிக்கை தவறானது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பாராம் ஐங்கரநேசன்
Tuesday, June 20th, 2017திட்டமிடப்பட்ட ரீதியில் தங்களுடைய சுயநினைவற்ற நிலையில் எனக்கெதிராகத் தயாரிக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை தவறானது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். இதற்காக நான் நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயத்திலுள்ளேன் எனத் தெரிவித்தார் வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்.
யாழ்.திருநெல்வேலியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை(19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
விசாரணை அறிக்கையில் நான் சொல்லாத பல விடயங்களைச் சொல்லியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் சொல்லிய பல விடயங்களை அவர்கள் தங்கள் விசாரணை அறிக்கையில் சேர்க்கவில்லை. உண்மைக்கு மாறான பல விடயங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன . இது தொடர்பாகவே நான் எனது தன்னிலை விளக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.
விசாரணைக்குழுவினர் கொள்கை ரீதியாக நான் எடுத்துள்ள சில முடிவுகளைத் தவறெனத் தெரிவித்திருக்கிறார்கள். உதாரணமாக ஏற்று நீர்ப் பாசனம் பிழையானது. ஏற்கனவே தோல்வி கண்டதொரு திட்டமென்று குறிப்பிட்டிருக்கிறார்கள். நீர்ப்பாசனத் திணைக்களம் சூரிய மின் சக்தியில் இயங்கக் கூடிய பாரிய ஏற்று நீர்ப்பாசனத் திட்டமொன்றைத் தற்போது திருவையாறில் முன்னெடுத்திருக்கிறது.
விசாரணை அறிக்கையில் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் பிழையானது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி விவசாய அமைச்சருக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் நீங்கள் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துகிறீர்கள் என்று தெரிவித்து யாராவது ஒருவர் தனிப்பட்ட ரீதியில் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் இந்தத் திட்டம் நிறுத்தப்பட வேண்டியதொரு சூழல் உருவாகும்.
ஏற்கனவே தோல்வியடைந்த பார்த்தீனிய ஒழிப்புச் செயற்திட்டத்தை நான் ஆரம்பித்தது தவறு எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் நிச்சயமாகத் திணைக்களம் அதனை அழிப்பதற்கான தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடும். யாராவது ஒருவர் விஷமத்தனமாக இந்த விசாரணைக்குழுவின் அறிக்கையைக் காட்டி நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டால் அந்த முயற்சி தடைப்படுத்தப்படும் என்றார்.
Related posts:
|
|