வாள்வெட்டுக் காரர்கள் உருவாக வெளிநாட்டுப் பணம் தான் காரணம் – நீதிபதி இளஞ்செழியன் குற்றச்சாட்டு!

Sunday, May 15th, 2016

வாள்வெட்டுக் காரர்களை உருவாக்கியதற்கும், வீதியில் நிற்கும் இளைஞர்களுக்கும் வெளிநாட்டுப் பணம் தான் காரணம். வெளிநாட்டுப் பணம் இல்லாதவன் ஒழுங்காகப் படிக்கிறான் . கட்டுக் கோப்பான வாழ்க்கை வாழுகிறான் . வீதிகளில் வேலையின்றிச் சுற்றித் திரியும் அனைவருக்கும் பின்னால் வெளிநாட்டுப் பணம்  தானிருக்கிறது . அவர்களை இயக்குகிறது. வெளிநாட்டுப் பணத்தை வைத்துக் கொண்டு பலருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆகவே, வெளிநாட்டிலிருந்து பணத்தை அனுப்பும் உறவுகள் பணத்தை அனுப்பும் போது இந்தப் பணம் எதற்காகச் செலவு செய்கிறார்கள் என்பதை இனிமேலாவது உணர வேண்டும் எனத் தெரிவித்தார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்  இளஞ்செழியன்.

மானிப்பாய் சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்லூரியில்  நேற்று (14) இடம்பெற்ற “மனித வாழ்வில் விழுமியங்கள்” எனும் தலைப்பிலான கருத்தரங்கில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கடந்த சில நாட்களாக  அவுஸ்ரேலியா , கனடா , இலண்டன்  மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து  எனது நண்பர்கள் தொலைபேசி அழைப்பு எடுத்த வண்ணமுள்ளனர். தற்போது  யாழ்ப்பாணத்தில்  இடம்பெறுகின்ற கேவலமான வாள்வெட்டு , தெரு ரவுடித்தனம் செய்யும் கேடிகளின் பின்னால் வெளிநாட்டுப் பணம் உள்ளதா ? எனக் கேட்டார்கள் . ” ஆற்றில் போட்டாலும் அளந்து போடு ” என்பது தான் என்னுடைய பதிலாகவிருந்தது.

வெளிநாட்டில் வாழுகின்ற எங்களுடைய இலங்கைத் தமிழர்கள் யாழ். குடாநாட்டிலுள்ள தங்களுடைய உறவுகளுக்கு மிகவும் கஷ்டப்பட்டு பனி , குளிர் பாராது உழைத்த பணத்தை அனுப்பி வைக்கிறார்கள். அந்தப் பணம் யாழ்ப்பாணச் சாராயக் கடைகள் தோறும் நிரப்பப் படுகிறது. சாராயக் கடைகளின் மீது வைத்திருக்கும் தொடர்பு பின்னர் போதை வஸ்துக் குழுவினருடனான உறவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. இவ்வாறான பழக்கங்களுக்கு ஆட்பட்டவர்கள் பின்னர் தங்களிடம் பணம் இல்லை எனும் போது கொள்ளையடிப்பதற்கும் , வாள்கள் எடுத்து மற்றவர்களை வெட்டும் நிலைமையையும் உருவாக்கியுள்ளது .

” பிணத்திற்கு வராவிட்டாலும் பணத்தை அனுப்பு ” என யாழ்ப்பாணத்திலிருந்து தொலைபேசி அழைப்புச் செல்கிறது. ‘தம்பி …நீ என்ர  பிணம் பார்க்கக் கூட வர வேண்டாம்’  ‘உயிருடனிருக்கும் வரை பணம் அனுப்பு ‘ என இங்கிருந்து கதைப்பவர்கள்   சொல்கிறார்கள். அவர்களும் பணம் இல்லாமல் தங்கள் உறவுகள் கஷ்டப்படுகிறார்கள் போலும் என நினைத்துப் பணம் அனுப்புகிறார்கள். அவர்கள் எவ்வாறு  கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் என்பதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன் . குளிர் வாழ்க்கை , இரண்டு நேர வேலை மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வெளிநாட்டிலிருந்து உறவுகள் அனுப்பும் பணம் இங்கு தவறான செயல்களுக்குத் தூண்டுகோலாகவும் , காரணமாகவும் அமைகிறது. வெளிநாட்டிலிருந்து  ஆயிரம் டொலர் அனுப்பினால் இங்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா . இன்று யாழ்ப்பாணத்தில் 20 ஆயிரம் முதல்  25 ஆயிரம் வரையான பல்சர் மோட்டார்ச் சைக்கிள்களில் தேவையில்லாமல் ஓடித் திரிகிறார்கள் எங்களுடைய இளைஞர்கள் . என்ன வேலை என்று கேட்டால் ஒரு வேலையுமில்லை என்பது தான் பதிலாகவுள்ளது.

இவ்வாறு ஊர் சுற்றித் திரியும் இளைஞர்களிடம் நவீன ரக செல்போன்கள் வைத்திருக்கிறார்கள் .   நான் ஒரு மேல்நீதிமன்ற நீதிபதி. என்னுடைய கைபேசியைப் பாருங்கள் . 2500 ரூபா பெறுமதியானது. தற்போது 1500 ரூபாவுக்கும் வாங்க மாட்டார்கள். ஆனால் , அண்மையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஐபோன் கைப்பற்றப்பட்டது. கழுத்தில் நாய்ச் செயின் மாதிரி ஒரு தங்கச் செயின் .நாய்ச் செயின் கூடக் கொஞ்சம் தான் பெரிது என்று சொல்லலாம் .

யாழ்ப்பாண வரலாற்றில் எம். ஜி. ஆரின்  திரைப்படமும் , சிவாஜியின் ‘கெளரவம் ‘ திரைப்படமும்  தான் நள்ளிரவு -12 மணிக்கு ஆரம்பித்தது என நான் கேள்விப்பட்டேன் . அதன் பின்னர் நான் காலை-10 மணிக்கு முன்னர் திரைப்படம் ஓடியது என நாம் கேள்விப்படவில்லை.

விடியற்காலை-4.30 மணிக்கு ராஜா தியேட்டரில் கத்தி படம் . முதல் நாள் மாலை -5 மணிக்கு விஜய்யுக்குப் பாலாபிஷேகம் நடக்கிறது . பாருங்கள் ….எங்களுடைய இளைஞர்களின் அவல நிலையை. மறுநாள் தியேட்டரில் ஒரே கொண்டாட்டம் . சத்தம் . கொண்டாடுவதற்கும் ஒரு நேரமிருக்கிறது . அதிகாலை – 4 மணிக்கும் எழும்பி நின்று தியேட்டரில் ‘ தளபதி  வாழ்க ‘ என யாரேனும் கத்துவானா ?   எட்டு மணிக்கு நான்  வேலைக்குப் போகிறேன் . என்னுடைய கார் நிறுத்தப்படுகிறது . நானூறு மோட்டார்ச் சைக்கிள்கள் ராஜாத் தியேட்டரிலிருந்து வெளியே வருகிறது. அப்போது நான் கஸ்தூரியார் வீதியில் எனது கார் பத்து நிமிடம் நிறுத்தப்படுகிறது. வெளியே வந்த  மோட்டார்ச் சைக்கிள்களில்  மும்மூன்று   பேர் ஏறிச் செல்கிறார்கள். அவ்வளவு பேரும் 16 வயதுக்கும் 22 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

தமிழ்நாட்டுச் சினிமாக் கலாசாரத்தைப் பின்பற்றாத சமூகம் நாங்கள் . ரஜினிகாந்திற்கும் , கமலஹாசனுக்கும் பின்னால் போகாத சமூகம் நாங்கள். நடிகர் , நடிகைகளின் பின்னால் செல்லாத நாங்கள் இப்போது கேவலங் கெட்ட கலாசார  வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது மன வேதனையளிக்கிறது.

இன்னொரு தடவை இவ்வாறு பாலாபிஷேகம் செய்யும் செயலில்  ஈடுபட்டால் பாலாபிஷேகம் செய்பவர்களுடன் விஜயின் கட் அவுட்டையும் தூக்கி வருமாறு நான் பொலிஸாரைப் பணித்துள்ளேன் . (சபையில் பலத்த சிரிப்பொலி ) .

வெளிநாட்டுத் தமிழர்களுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று சொல்லவில்லை.  அனுப்புங்கள். ஆனால் , ஆற்றில் போடும் போதும் அளந்து போடுங்கள் என்பதே என் அன்புக் கோரிக்கை . ஏனெனில் , நீங்கள் இவ்வாறு அனுப்பும் பணம் யாழ். குடாநாட்டின் சமூக , கலாசார சீரழிவுகளுக்குப் பயன்படுகிறது என்பதை நான் அடித்துக் கூறுகின்றேன்.

அவுஸ்திரேலியா வாழ்  இலங்கைத் தமிழர்களில் 90 வீதமான தமிழர்கள் உச்சப் படிப்புப் படித்தவர்கள் . அவர்கள் தயவு செய்து அவுஸ்திரேலிய அரசுடனும் , அவுஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களுடனும் கதைத்து அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களின் கிளைகளை யாழ். குடாநாட்டில் திறப்பார்களேயானால் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அனுமதி கிடைக்காத எங்களுடைய பிள்ளைகளுக்குப் பல்கலைக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு உறுதுணையாகவிருக்கும் .  புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் இலண்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள் அதியுச்சப் படிப்புப் படித்தவர்களாகவுள்ளனர். அங்கு அதிகமான இலங்கைத் தமிழர்களும் வாழ்கின்றனர். அவர்கள் இலண்டன் பல்கலைக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி யாழ். குடாநாட்டில் கிளைகளைத் திறப்பார்களேயானால் எங்களுடைய மாணவ சமுதாயம் சீரழிந்து போகாது தடுப்பதற்கு வழியேற்படுத்தியதாக அமையும். மூன்றாவதாகப்  பெரும் தொகையான இலங்கைத் தமிழர்கள் கனடாவில் வாழ்கின்றனர். அங்குள்ள கனடா பல்கலைக் கழகங்களுடன் உறவுகளை ஏற்படுத்தி அதனுடைய கிளைகளை எமது மண்ணில்  திறக்க முன் வரவேண்டும். அமெரிக்காவின் கலிபோர்னியா, நியுயோர்க் எனப் பல மாநிலங்களிலும் இலங்கைத் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆகவே , வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் அன்பார்ந்த உறவுகளே ….நீங்கள் உங்கள் உதவிகளைக் கல்விக்குச் செய்யுங்கள் , கல்விக்கான கட்டடங்கள் அமைப்பதற்குச் செய்யுங்கள். நீங்கள் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற ஊர்களில் அநியாயம் நடக்கும் போது திரும்பிப் பாருங்கள்

படித்து முடித்து விட்டு வெறும் பார்வையாளராக இருக்காமல் என் சமூகத்திற்கு என்ன செய்தோம்? என ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் . இந்தக் கேள்விக்குப் பதிலைத் தேடினால் உங்கள் ஒருவருக்கும் தூக்கமே வராது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: