வார இறுதியில் பயண தடையை கடுமையாக அமுல்படுத்தப்படும் – மீறுபவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை என பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!
Saturday, June 12th, 2021நாட்டின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த விற்பனைக்காக இன்று திறக்கப்பட்டன. அத்துடன் குறித்த நிலையங்களின் செயற்பாடுகளை நாளையதினமும் மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மொத்த விற்பனையாளர்களும், நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களும், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பிரவேசித்து, மரக்கறிகள் மற்றும் பழ வகைகளைக் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நடைமுறையில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகள், எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்றையதினம் அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய விசேட ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் மாற்றப்பட்டதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவையை தடையின்றி நடத்தி செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய சேவைகள், ஆடைத் தொழிற்சாலை, கட்டுமானத் தளங்கள், கிராமிய சந்தைகள், விவசாய மற்றும் இயற்கை உர உற்பத்தி நடவடிக்கைகள், பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் இடம்பெறும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் வாராந்த சந்தைகள் திறக்கப்பட்டாலும், சுகாதார வழிமுறைகளுக்கு அமைய, மட்டுப்படுத்தப்பட்ட அளவினரை மாத்திரமே அனுமதிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை இவ் வார இறுதியில் பயண தடையை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீறும் நபர்களை கைது செய்வதற்கு விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|