வாகன சாரதிகளுக்கு அபராதம்: திருத்தப்பட்ட பத்திரம் சட்டமூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது – போக்குவரத்து அமைச்சு!

வாகன சாரதிகளுக்கு விதிக்கப்படும் அபராதம் குறித்த திருத்தப்பட்ட பத்திரம் தற்போது சட்டமூலமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலம் தனியார் பஸ் உள்ளிட்ட போக்குவரத்து துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனியார் பஸ் உள்ளிட்ட போக்குவரத்து துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு எதிர்வரும் 9ஆம் திகதி கூடவுள்ளது.
போக்குவரத்து மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள், வாகனப் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரி, மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.
குறித்த குழுவில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த சட்டமூலத்தை, தனியார் பஸ் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்திடம் முன்வைக்கவுள்ளதாகவும் நிஹால் சோமவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கூறப்பட்ட சங்கங்கள் மாத்திரமல்லாது போக்குவரத்து துறையின் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் குறித்தும் அவதானம் செலுத்தி, திருத்தப்பட்ட அபராதம் குறித்த சட்டமூலத்தை வௌியிடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|