வாகனங்களை பதிவு செய்யும் போது இடம்பெறும் முறைகேடுகளை கண்டறிய அரசாங்க கணக்குக் குழுவினால் உப குழு நியமனம்!

Wednesday, March 3rd, 2021

விசேட செயற்திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை இரட்டைப் பயன்பாடுடைய வாகனங்களாக பதிவு செய்வதனால் அரசாங்கத்துக்கு வருமான இழப்பு ஏற்படுவது தொடர்பில் கண்டறிய விசேட உப குழுவொன்றை நியமிப்பதற்கு அரசங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் கூட்டத்தின் போதே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இலங்கை சுங்கத்தின் 2017 – 2018 வருடத்துக்கான கணக்காய்வாளர் அறிக்கை மற்றும் தற்போதைய செயல்திறனை ஆய்வு செய்யும் நோக்கில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

அதற்கமைய, உப குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டதுடன் ஏனைய உறுப்பினர்களாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பர்னாந்துபுள்ளே, இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அஷோக் அபேசிங்க, ஹரிணி அமரசூரிய மற்றும் வீரசுமன வீரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

இதன்போது இலங்கை சுங்கத்தினால் விசேட செயற்திட்டங்களுக்கான வாகனங்களை கண்டறியும் எச்.எஸ். குறியீடு (HS Code) பயன்படுத்தும் முறை மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட செயற்திட்டங்களுக்கான வாகனங்களை கண்டறியும் முறை என்பவற்றில் காணப்படும் சட்டரீதியான வேறுபாடுகள் தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வாகனங்களை பதிவு செய்யும் போது சுங்க திணைக்களத்தினால் வழங்கப்படும் எச்.எஸ். குறியீட்டை (HS Code) கருத்தில் கொள்வதில்லை என்பதால் இவ்வாறு வாகனங்கள் வேறு விதமாக பதிவு செய்யப்படுவதால் அரசங்கத்துக்கு கிடைக்கவேண்டிய பாரியளவு வருமானம் இழக்கப்படுவதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் இலங்கை சுங்கம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என்பவற்றுக்கிடையில் செயற்படுத்தப்படும் தன்னியக்க கணினி கட்டமைப்பின் செயற்பாடுகள் துரிதமாக நடைபெறாமை குறித்தும் கோபா குழு அவதானம் செலுத்தியது.

மேலும் நிதி அமைச்சு, இலங்கை சுங்கம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகியன இணைத்து இந்த கட்டமைப்பை துரிதமாக ஸ்தாபிப்பதன மூலம்  பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதை தவிர்க்க முடியும் என அரசாங்க கணக்குகள் குழு இங்கு வலியுறுத்தியதுடன் இலங்கை சுங்கத்தின் அதிகாரிகள் சேவைக்கு வருகை தருதல் மற்றும் சேவையை விட்டு செல்லும் போது  கைவிரலடையாளத்தை பதிவு செய்யும் முறைமை தொடர்பிலும் கோபா குழு இதன்போது கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: