வவுனியா வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் புதிதாக நியமனம் – வடக்கில் புதிதாக 50 வைத்திய உத்தியோகத்தர்கள் சுகாதார அமைச்சினால் புதிதாக நியமனம் – பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்!

Wednesday, February 17th, 2021

வவுனியா வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சினால், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட பிரதேச வைத்தியசாலைகளிற்கு 11வைத்திய உத்தியோகத்தர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனத்தில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்களும் செட்டிகுளம் மற்றும் நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளிற்கு ஒரு வைத்தியரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பொது வைத்தியசாலையில் மகப்பேறு, இரத்த வங்கி உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 9 வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 8 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுள்ளதுடன் ஒருவர் எதிர்வரும் நாட்களில் பொறுப்பேற்பார் என்று வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு புதிதாக 50 வைத்திய உத்தியோகத்தர்கள் சுகாதார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த நியமனத்தில் வட.மாகாணத்தின் கஷ்ட பிரதேசங்களிலுள்ள சில வைத்தியசாலைகளுக்கும் வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: