வவுனியா சென்ற பேருந்து மீது உரம்பிராயில் தாக்குதல்! சாரதி படுகாயம்!!

Tuesday, June 28th, 2016

காரைநகர் ஊடாக வவுனியாவிற்கு சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் சாரதி காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 6.15 மணியளவில் யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் வைத்து குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சாலை முகாமையாளர் தெரிவித்தார்

இது தொடர்பில் சாலைமுகாமையாளருடன் எமது செய்தியாளர் தொடர்புகொண்டு வினவியபோது –

வழமைபோல காரைநகரிலிருந்து வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு சேவையிலீடுபடும் பேருந்துகள் தமது சேவையினை மேற்கொண்டிருந்தபோது வவுனியாவுக்கு சென்ற பேருந்து மீது உரும்பிராய் சந்தியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்ததுடன் சாரதியான வரணி கொடிகாமத்தை சேர்ந்த கதிர்காமகுமார் குலசிங்கம் (55) என்பவர் காயமடைந்தநிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமது சாலைக்கு சொந்தமான மற்றுமொரு பேருந்து முல்லைத்தீவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த போது சண்டிலிப்பாய் பகுதியில் வைத்து அதன் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனால் பேருந்தின் கண்ணாடி சேதமுற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: