வவுணதீவு சம்பவம் – கைது செய்யப்பட்ட அஜந்தன் விடுதலை!

வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் அஜந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி விடுத்த உத்தரவுக்கு அமைய இன்று காலை பதில் நீதவானின் இல்லத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொண்டுவரப்பட்டு ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் அஜந்தன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், அஜந்தன் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் சர்ஹானின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுணதீவு பொலிஸாரை தாங்களே கொலைசெய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில் அஜந்தனை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வீ.தியாகேஸ்வரன் முன்னிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்த பதில் நீதவான் எதிர்வரும் 13ஆம் திகதி திறந்த நீதிமன்றில் சமூகமளித்து விடுவிப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் பணித்தார்.
அதனைத்தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அஜந்தன் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டதாக அஜந்தனின் மனைவி தெரிவித்தார்.
Related posts:
|
|