வழிகாட்டலும் ஆலோசனையும் பாடநெறிக்கு மீள விண்ணப்பம்!

Sunday, December 3rd, 2017

வடக்கு மாகாணத்தில் வழிகாட்டலும் ஆலோசனையும் பாடத்துக்கு ஆசிரியர்களாக உள்வாங்கப்படுபவர்களுக்கான விண்ணப்பம் மீளக் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது;

வடக்குமாகாண பாடசாலைகளில் பாடரீதியில் ஆசிரியர் வெற்றிடங்கள் பல காணப்படுகின்றன.

அவற்றை நிவர்த்தி செய்ய திறந்த போட்டிப் பரீட்சை நடத்துவதற்கு ஏப்ரல் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அனுமதிக்கமைய வழிகாட்டலும் ஆலோசனையும் பாடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் உளவியல் அல்லது சமூகவியல் பாடத்தினை முதன்மை பாடங்களில் ஒன்றாகக் கொண்ட கலைப்பட்டதாரியாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டமைக்கு அமைவாக விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

ஆனால் இந்தத் துறைக்கு உளவியல்துறை பட்டதாரிகளே பொருத்தமானவர்கள் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உளவியல்துறை தெரிவித்துள்ளது. உளவியல் பாடத்தை கற்றுக் கொண்டவர்கள் இதற்கான அறிவை தனியான ஒரு பாடத்தின் ஊடாக கற்றுக்கொண்டமையால் அவர்களே இதற்கு பொருத்தமானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டமையால் சமூகவியல் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் தற்போது ஆட்சேபனைகள் எழுந்துள்ளன. ஆகவே இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி அமைச்சால் கோரிக்கை முன்வைக்கப்பட்டதற்கு இணங்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் உளவியல் பாடத்தை முதன்மை பாடங்களில் ஒன்றாக கொண்ட பட்டதாரிகளை இந்தப் பிரிவிற்கு உள்வாங்க மீள விண்ணப்பங்களை ஆளுநரின் அனுமதியுடன் கோருவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: