வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கினர் என்று குற்றச்சாட்டு – படுகாயமடைந்துள்ள இருவர் மருத்துவமனையில்!

Thursday, June 21st, 2018

மோதல் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட இருவர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தாக்குதல் மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைது செய்யப்பட்ட மீனாட்சி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காரூபன் மற்றும் தீருவிலைச் சேர்ந்த குகதாஸ் விஜயதாஸ் ஆகிய இருவருமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை எனது நண்பர் விஜயதாஸ் மற்றும் இன்னொருவருக்கிடையில் மோதல் ஏற்பட்டது. எனது நண்பரை தாக்குதலில் ஈடுபடாது தடுத்து அங்கிருந்து அழைத்து வந்தேன். எனினும் எனது நண்பரைத் தாக்கிய மற்றையவருக்கு ஆதரவாகப் பொலிஸார் என்னையும் சண்டையில் ஈடுபட்ட எனது நண்பனையும் கைது செய்ய முற்பட்டு அந்த இடத்தில் வைத்து தாக்கியதுடன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றும் இருவர் கையைப் பிடிக்க கடுமையாகத் தாக்கினர்.

ஏங்களைத் தாக்கியதைக் கூறக்கூடாது எனத் தெரிவித்த பொலிஸார் பருத்தித்துறை நீதிவானிடம் முற்படுத்தினர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டதன் பிற்பாடு தலா ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டோம். பின்னர் நாங்கள் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சென்று முறைப்பாடு செய்தோம்.

உடம்பில் வலிகள் அதிகம் காணப்படுவதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றோம். எங்கள் மீது தாக்குதலை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரி சிவில் உடையில் இருந்தே எம்மைத் தாக்கினார். என வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கெங்காரூபன் தெரிவித்தார்.

நடக்க முடியாதளவு கால்வலியும் ஏற்பட்டுள்ளது. உரிய முறையில் எமக்கான நீதி கிடைக்க வேண்டும். நான் சண்டையில் ஈடுபட்டது உண்மை ஆனால் அதற்குப் பொலிஸார் வழங்கிய தண்டனை கொடூரம் என்று சண்டையில் ஈடுபட்ட பொலிஸாரால் தாக்கப்பட்ட குகதாஸ் விஜயதாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவிடம் தொடர்பு கொண்டுகேட்டபோது இந்தச் சம்பவம் தொடர்பாக எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். அந்தவகையில் உதவிப்பொலிஸ் பரிசோதகர் மற்றும் குறித்த பொலிஸ் நிலைய அதிகாரி ஆகியோருக்கு இந்தச் சம்பவம் தொடர்பான விளக்கக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவர்களது அறிக்கை மற்றும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும் அடுத்தகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: