வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்குள் நுழைய 14 நாட்கள் தடை – காய்ச்சலுடன் சுவாமி காவியவரால் மூவர் தனிமைப்படுத்தலில்!

Monday, June 22nd, 2020

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிக பொதுமக்கள் கூடிய நிலையில், ஆலயத்தை முற்றுகையிட்ட பருத்துறை சுகாதாரசேவைகள் வைத்திய அதிகாரி பணிமனையை சேர்ந்த அதிகாரிகள் குழாம் ,14 நாட்கள் கோவிலுக்குள் நுழைய தடைவிதித்துள்ளது.

அத்துடன் ஆலயத்தில் சுவாமி காவிய ஒருவருக்கு காய்ச்சல் இருந்த நிலையில் அவருடன் சேர்ந்த சாமி காவிய மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஆலயத்திலிருந்து தப்பி ஓடியவர்களை பொலிஸாரின் உதவியுடன் தேடுவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஆலயத்திற்கு சென்ற சுகாதார பிரிவினர், ஆலயத்திற்குள் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகளவான மக்கள் கூடுவதை தவிர்க்குமாறும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், முக கவசம் அணிவதை கட்டாயமாக்குமாறும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து நேற்றையதினம் அதிகாரிகள் ஆலயத்திற்கு சென்றபோது அங்கு அதிகளவு மக்கள் கூடியிருந்ததுடன், சுகாதார நடைமுறைகள் எதனையும் பின்பற்றாமை அறியப்பட்டுள்ளது. இதேபோல் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தில் சேவையாற்றும் ஒருவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக விடுமுறை அறிவித்திருந்த நிலையில் அவரும் ஆலயத்தில் நின்று சுவாமி காவியுள்ளார்.

இதனைடுத்து சாமி காவியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்ததுடன், ஆலயத்திற்குள் 14 நாட்களுக்கு பொதுமக்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டு தடை உத்தரவு ஆலய சுவரில் ஒட்டப்பட்டுள்ளது.

அத்துடன், பூசகர் மற்றும் அவருக்கு துணை புரிபவர்கள் என 5 பேர் மட்டும் ஆலயத்தில் பூசை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: