வலுக்கிறது தாழமுக்கம் – தொடரும் கனமழை – தத்தளிக்கின்றது வடக்கு மாகாணம்!

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் தற்போது பெய்துகொண்டிருக்கும் செறிவான மழைவீழ்ச்சி மேலும் தொடரும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஆயினும் இன்றிலிருந்து எதிர்வரும் 13 ஆம் திகதிக்குள் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது கன மழை அல்லது மிகக் கன மழை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவான தாழமுக்கம் இப்போது வடமேற்குத் திசை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றது. இது தீவிர தாழமுக்கமாக மாறி, தமிழ்நாட்டுக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேகமான காற்றுடன் மழை வீழ்ச்சி கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்தை விட வடக்கு மாகாணத்திலேயே அதிக காற்றும், மழை வீழ்ச்சியும் காணப்படும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை வடக்கு மாகாணத்தில் கனத்த மழை எதிர்பார்க்கப்படுவதால் தாழ் நிலப் பிரதேசங்களில் உள்ள மக்கள், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது உகந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வாழிடங்களுக்கு அருகில் உள்ள பெரும் மரங்களின் கிளைகளை இயலுமானவரை அகற்றுவதும் பாதுகாப்பானது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், மீனவர்கள் கடலுக்குச் செல்லவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது பெய்துவரும் கனமழையால் வடக்கு மாகாணத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாடளாவிய ரீதியிலும் பரவலாக மழை வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. மலையகத்தில் இன்று ஏற்பட்ட மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|