வலி.கிழக்கில் புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனை தடை – ஈ.பி.டி.பியின் பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரனின் முயற்சி வெற்றி!

Friday, September 14th, 2018

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனையை தடைசெய்வது தொடர்பான பிரேரணை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனையை தடைசெய்வது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான இராமநாதன் ஐங்கரனால் குறித்த பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.

குறித்த பிரேரணையில் –

எமது நாட்டில் நாளொன்றுக்கு 72 பேர் என வருடமொன்றிற்கு 26280 பேர் புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனைகளின் காரணத்தினால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மரணிக்கின்றனர். மேலும் புகைப்பொருட்களின் பாவனையினால் ஏற்படும் புற்றுநோய், மாரடைப்பு போன்ற தொற்றா நோய்களினால் பாவனையாளர்கள் பாதிக்கப்படும் போது அவரை தங்கிவாழும் குடும்பம் அடிப்படை தேவைகளையேனும் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் பாரிய கஸ்டங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

2010ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்க்கொண்ட தந்திரோபாய முறையிலான வியாபார முன்னெடுப்புக்கள் காரணமாக சிகரட் உட்பட புகைப்பொருள் பாவனையானது பாரிய அதிகரிப்பை காட்டியது பொருளாதார, சமூக ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பாரிய சவாலகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணத்தில் அதிகளவான சனத்தொகையை கொண்டுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் புகைப்பொருள் மற்றும் மதுசாரப் பாவனையானது பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளமை யாவரும் அறிந்த விடயமே, அதன் தாக்கம் மேலும் அதிகரித்து தற்போது  கஞ்சா, ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களையும் பாவனை செய்யும் அளவிற்கு எமது இளைஞர் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களும் இவ்வாறான போதைப் பொருள் பாவணையாளர்களினாலே மேற்க்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கஞ்சா,ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களைப் பாவிப்பவர்கள் ஆரம்பத்தில் புகையிலை சார் உற்பத்தி பொருட்களையே பாவிப்பதாகவும் அதன் பின்னரே ஏனைய போதைப்பொருள் பாவனைக்கு ஆளாகுவதாகவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு புகைப்பொருள் பாவனையை ஆரம்பிக்கும் வயது 13 தொடக்கம் 18 என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றது. ஆகவே பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தே மேற்குறிப்பிடப்பட்ட வியாபாரங்கள் மேற்க்கொள்ளப்படுகின்றமை வெளிப்படையான உண்மை.

தொடர்ச்சியான தடுப்பு செயற்பாடுகள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும், ஆனால் சிகரட், பீடி, சுருட்டு உட்பட ஏனைய புகையிலை சார் உற்பத்தி பொருட்களின் உற்பத்தியாளர்கள் பணபலம், அரசியல் பலத்தைக் கொண்டு மேற்க்கொள்ளும் தந்திரோபாய செயற்பாடுகளால் பாவனை மேலும் அதிகரித்துச் செல்கின்றமையை அவதானிக்க முடிகின்றது. எனவே தடுப்புச் செயற்பாடுகளில் ஒன்றாகிய “கிடைக்கக்கூடிய வழிமுறைகளை கட்டுப்படுத்தல்” என்ற விடயத்தினை விரைவாகவும், ஆக்கபூர்வமாகவும் செயற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கிடைக்கக்கூடிய தன்மையை கட்டுப்படுத்த வேண்டுமாயின் விற்பனையை தடுத்தல் அல்லது குறைத்தல் அவசியம்.

உற்பத்தி நிறுவனங்கள் சிறுவர்களை இலக்கு வைத்து இவ்வாறான வியாபாரங்களை முன்னெடுப்பதால் சிறுவர்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் இவ்வியாபாரம் முற்றாக தடை செய்தல் வேண்டும். தேசிய ரீதியில் இவ்வாறான சட்டங்களை அமுல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் எமது பிரதேசம், எமது பிரதேச மக்கள் பாரிய பிரச்சனைகளை முகம் கொடுக்க வேண்டியுள்ளது. எமது மக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம், சுகாதாரம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக மக்களால் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாம் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வை எட்டுவது எமது கடமையாகும்.

அந்தவகையில் –

எமது பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் காணப்படும் பாடசாலைகள், ஏதேனும் பதிவு செய்யப்பட்டுள்ள மத அனுஸ்டான இடங்கள், அரச வைத்தியசாலைகள், பேருந்து நிலையங்கள், சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற இடங்களில் இருந்து 500 மீற்றர் வரையிலான தூரத்திலுள்ள விற்பனை நிலையங்களில் சிகரட், வீடி, சுருட்டு உட்பட ஏனைய எந்தவிதமான புகையிலைசார் உற்பத்தி பொருட்கள் மற்றும் இலங்கை அரசினால் போதைப்பொருள் என அடையாளப்படுத்தப்பட்ட எந்த விதமான போதைப்பொருட்களின் விற்பனைக்குத் தடை செய்யப்படவேண்டும்.

அரசினால் போதைப்பொருள் என அடையாளப்படுத்தப்பட்ட எந்த வகையான போதைப்பொருட்களின் விளம்பரங்கள், மற்றும் விலைப் பட்டியலை காட்சிப்படுத்தல் போன்றவற்றுக்குத் தடைசெய்தல்

போதைப்பொருட்களை பாவித்தல் அல்லது பாவனைக்கு அனுமதித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் உற்பத்தி நிறுவனங்களினால் வழங்கப்படும் ஏதேனும் விளம்பரங்கள், பரிசுப்பொருட்கள், சான்றிதழ்கள் காட்சிப்படுத்தலானது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசினால் போதைப்பொருள் என அடையாளப்படுத்தப்பட்ட எந்த வகையான போதைப்பொருட்களின் விற்பனைக்குத் தடை.

மேற்குறிப்பிடப்பட்ட சட்டங்களை மீறும் நபர்கள், மீறுதலுக்கு துணையாக இருக்கும் நபர்கள் மற்றும் மீறுதலுக்கு அனுமதியளித்த நபர்களின் அனுமதிப்பத்திரமானது ஒருவருடத்திற்குள் குறையாமல் தடை அல்லது 50000 ரூபா தண்டப்பணம் அல்லது அவை இரண்டிற்கும் ஆளாக வேண்டிவரும்.

மேற்குறிப்பிடப்பட்ட சட்டங்களை மீறும் நபர்கள், மீறுதலுக்கு துணையாக இருக்கும் நபர்கள் மற்றும் மீறுதலுக்கு அனுமதியளித்த நபர்களின் வியாபாரத்திற்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேற்குறிப்பிடப்பட்ட சட்டங்களை மீறும் நபர்கள், மீறுதலுக்கு துணையாக இருக்கும் நபர்கள் மற்றும் மீறுதலுக்கு அனுமதியளித்த நபர்களின் நெருங்கிய உறவினர்களின் வியாபாரத்திற்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேற்குறிப்பிடப்பட்ட சட்டத்தை அமுல்படுத்தல், கண்கானித்தல், விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்றவற்றின் அதிகாரம் பெற்ற அதிகாரிகளாக, பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச சபையின் கண்கானிப்பாளர்கள் போன்றோர் காணப்படுவர்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தை  வலுப்படுத்துதல், புதிய பரிந்துரைகளை முன்வைத்தல் மற்றும் ஆலோசணை வழங்கும் நிறுவனங்களாக, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலகம், பெதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச போதைப்பொருள் தடுப்புக்குழு, பொலிஸ் நிலையம், பாடசாலை அதிபர்கள், மதத்தலைவர்கள்  காணப்படுவர்.

இச் சட்டத்தை மாற்றியமைத்தல், வலுப்படுத்தல், நடைமுறைப்படுத்தல், போன்றவற்றின் முழு அதிகாரமும் பிரதேச சபையைச் சார்ந்ததாகும்

பிரதேச சபையின் சட்டத்தில் 225 ஆவது உறுப்புரிமைக்கு இணங்க உள்@ராட்சி நிறுவனங்களினால் சிறு நகரசபை மற்றும் பிரதேச சபைகளினால் அமுல்படுத்தப்பட்ட உபவிதிகள் அந்த பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது.

சுகாதார மற்றும் சூழல் பிரச்சனைகள் காரணமாக மக்கள் வாழ்க்கைக்கு ஏற்படுகின்ற இடையூறுகள் பார்வைக்கும், செவிமடுத்தலுக்கும், உறுப்புக்களுக்கும் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் கோபம், வெறுப்புத்தன்மை, துஸ்பிரயோகம், பயம் அல்லது நட்டம்  ஏற்படுகின்ற அல்லது ஏற்படுத்தக் கூடிய சுகாதாரத்திற்கும் சொத்துக்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான விடயங்களை குறைப்பது தொடர்பாக அல்லது அது தொடர்பான கவனயீனம் தொடர்பாக ஏற்படுத்தல். ஆகவே இந்த உபவிதிகளை இயற்றி எமது வருங்கால சந்ததியினரையும் காப்பாற்ற அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts: