வலிகள் இல்லாத வெற்றிகள் கிடையாது – பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Saturday, July 21st, 2018

வலிகள் இல்லாத வெற்றிகள் கிடையாது என்பதை என்றும் நாம் மனதில் கொண்டு நம் குழந்தைகளை நன்மக்களாக வளர்ப்பதில் மிகுந்த அக்கறையும் முயற்சியும் எடுப்போம் என பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

நாகர்கோவில் மேற்கு முத்தமிழ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று (2018.07.20) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் முன்பள்ளி முகாமைத்துவக்குழுத் தலைவி திருமதி எஸ்;.செந்தில்குமார் தலைமையில் இடம்பெற்றது. இந் விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்-

தலைமுறை தலைமுறையாகக் கட்டிக் காக்கப்பட்டு வந்த பழக்க வழக்கங்களும் கலாச்சாரங்களும் ஒழுங்க விழுமியங்களும் காற்றில் கற்பூரம் கரைவதைப் போல் காணாமல் போய் விட்டதற்கு தாய் தந்தையர் இருவரும் வேலைக்குச் செல்வது, பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிக்காமல் இருப்பது, தடையின்றிக் கிடைக்கும் கைப்பேசி, இணையம் மற்றும் தொலைக்கட்சி என வசதிகள் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். தொலைக்காட்சியில் சிறுவர்கள் எதை எதையெல்லாம் பார்க்கக் கூடாதவை என்று பெற்றோர், பெரியோர்கள் மறைக்கிறார்களோ அவையெல்லாம் தற்போது மிக எளிதாக கணனியிலும் கைப்பேசியிலும் பார்க்க முடிகிறது. அவர்களின் வயதுக்கு மீறிய இலைமறை காயாக இருக்க வேண்டியவை எல்லாம் அவர்களின் கண்களுக்கு அருகில் தங்கு தடையின்றி கிடைக்கிற்து. இப்படிப்பட்ட சூழ் நிலையில் பிள்ளைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளர்வது எப்படிச் சாத்தியம் என்ற கேள்வியும் எழுகிறது. ஒழுக்கமான பெற்றோர், கண்டிப்பு, நல்ல வீட்டுச் சூழல் என்று எல்லாம் இருந்தும் பிள்ளைகள் வழி தவறுவதற்கு கெட்ட நண்பர்களின் சகவாசமும் முக்கிய காரணமாகும்.

குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம் என மனிதர்களின் வாழ் நாட்களை மூன்று பருவங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். குழந்தைப்பருவம் எதுவும் எழுதப்படாத கரும்பலகைக்குச் சமம். நாம் அவர்களை எப்படி வளர்கிறோமோ, எந்த சூழலில் வளர்கிறோமோ அப்படியே கரும்பலகை நிரப்பப்படுகிறது. பிள்ளைகள் வளர வளர சவால்களும்; வரலாம். இந்த கடினமான கடமையை பெற்றோர் நல்ல விதமாகப் பூர்த்தி செய்து விட்டால் இளமைப்பருவம் அழகாக மலரும். இப்பருவத்தில் அவர்கள் பெறும் அனுபவங்கள் அவர்களை நல்ல மனிதர்களாக மாற்றும். ஆபத்தான அறிவியல் கண்டுபிடிப்புக்கள் இல்லாத காலத்தில் பெற்றோருக்கு இவ்வளவு சவால்கள் இருக்காது.

கைக்கெட்டும் தூரத்தில் அவை நிறைந்திருக்கும் இந்தக் காலத்தில், பிள்ளைகளை, “புதையலைக் காக்கும் பூதம் போல்” காக்கும் பணி நிச்சியமாக சவால்கள் நிறைந்ததுதான். அற்றைச் சமாளித்து வெற்றி பெற்று விட்டோமானால் நாம் கனவு காணும் புதிய சமுதாயத்தில் நன்மக்களைப் பெற்ற பெற்றோர் என்று அனைவரும் பெருமிதம் கொள்வார்கள். எனவே வலிகள் இல்லாத வெற்றிகள் கிடையாது என்பதை என்றும் நாம் மனதில் கொள்ளவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நாகர்கோவில் மகா வித்தியாலய அதிபர் திரு இ.சிவசங்கர், நாகர்கோவில் மேற்கு கிராம அலுவலர் செபமாலை தோமஸ் யூட், பருத்தித்துறை பிரதேசசபை நாகர்கோவில் வட்டார உறுப்பினர் ஏ.சுரேஸ்குமார் கௌரவ விருந்தினர்களாக நாகர்கோவில் மேற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.ஸ்ரீகாந்த், நாகர்கோவில் கிழக்கு கிராம உத்தியோகத்தர் அ.விமலேசன் மற்றும் சனசமூக நிலையத் தலைவர் முடியப்பு ஜோசப் ஜோன்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts: