வலயக் கல்விப்பணிப்பாளரை அச்சுறுத்திய மாகாண கல்வி அமைச்சர் – கண்டனம் தெரிவிக்கிறது இலங்கை ஆசிரியர் சங்கம்!

Thursday, August 2nd, 2018

நடமாடும் சேவையின் போது வடமாகாண கல்வியமைச்சரின் அடாவடி செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டித்துள்ளதுடன் இவ் அடாவடி தொடருமாயின் தொழிற்சங்க நடவடிக்கை  மேற்கொள்ளவேண்டி வருமெனவும் இச்சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவிக்கையில்:

வடமாகாணத்தின் கல்வி வலயங்களில் நடைபெறும் நடமாடும்சேவை கல்வியமைச்சரின் அரசியலை வளர்ப்பதற்குரிய இடமாக மாறிவருவது கண்டனத்துக்குரியதாகும். கடந்த செவ்வாய்க்கிழமை தீவக கல்வி வலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையில் பாடசாலை நேரம் தவிர்ந்த வேளைகளில் வகுப்புக்களை நடத்த வலயக்கல்விப் பணிப்பாளர் அனுமதி தருவதில்லை என ஒரு அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தான் தடைவிதிக்கவில்லை எனவும் மேலதிக வகுப்புக்கள் நடத்துவது தொடர்பாக தாபனவிதிகளின் அடிப்படையில் சில விடயங்கள் அமைந்துள்ளன. அவற்றைப் பின்பற்றுவதுடன் மேலதிக வகுப்புக்களினை நடத்தும் ஆசிரியர்களின் சம்மதக் கடிதங்களையும் வழங்கி அனுமதிபெற்று வகுப்புக்களை நடத்தலாம் என கூறியுள்ளதாக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் கூறியபோதும் வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் அதனை செவிமடுக்காது தகாதவார்த்தைப் பிரயோகங்களால் பேசி வலயக்கல்விப் பணிப்பாளரை பல அதிபர்களின் முன்னால் அச்சுறுத்தியுள்ளார்.

இதனால் அங்குள்ள சில அதிபர்கள் கல்வியமைச்சரின் இச்செயற்பாடு தவறானது என சுட்டிக்காட்டியுள்ளனர். இத்தகைய கல்வியமைச்சரின் அடாவடியான செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கமும் மிகவன்மையாகக் கண்டிக்கின்றது.

வடமாகாணத்தின் கல்வியை தமது தனிப்பட்ட அரசியல் செய்வதற்குரிய களமாக எவரும் பயன்படுத்த முடியாது என்பதுடன் வடமாகாணத்தின் கல்வியமைச்சர் தகாதவார்த்தைப் பிரயோகங்களால் அதிகாரிகளை அச்சுறுத்த முடியாது ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்படும்போது குற்றஞ்சாட்டப்பட்டவர் சொல்லும் கருத்தினையும் ஆராய்ந்து பார்த்தே முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு கருத்துக்களை கேட்க முடியாத கல்வியமைச்சர் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் மேலதிக வகுப்புக்களை எடுப்பதற்குரிய தாபன விடயங்களையாவது அறிந்திருக்க வேண்டும்.

கல்வியமைச்சர் எனும் தோரணையுடன் அரச அதிகாரிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளை வடமாகாண கல்வியமைச்சர் உடனடியாக நிறுத்த வேண்டும். தொடருமாயின் அரசியல் அதிகாரவர்க்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார்.

Related posts: